ஆக்ஷன் காட்சிகளில் டூப் போடாமல் நடித்த ஐஸ்வர்யா ராஜேஷ்

ஐஸ்வர்யா ராஜேஷ் சோலோ ஹீரோயினாக நடித்துள்ள படம் ‛டிரைவர் ஜமுனா'. அவருடன் ஆடுகளம் நரேன், கவிதா பாரதி, அபிஷேக் குமார், இளைய பாண்டி, மணிகண்டன் ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கோகுல் பினோய் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார். 18 ரீல்ஸ் சார்பில் எஸ்.பி சௌத்ரி தயாரித்திருக்கிறார். வத்திக்குச்சி படத்தை இயக்கிய கின்ஸ்லின் இயக்கியிருக்கிறார்.

ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியதாவது: 'கனா' படம் வெளியாகி கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு திரையரங்குகளில் 'டிரைவர் ஜமுனா' வெளியாகிறது. எனது நடிப்பில் உருவான மூன்று திரைப்படங்கள் கொரோனா தொற்று காலகட்டத்தில் டிஜிட்டல் தளங்களில் தான் வெளியானது. ஆனால் 'டிரைவர் ஜமுனா' படத்தை பொறுமையுடன் காத்திருந்து திரையரங்குகளில் வெளியிடுவதற்காக படத்தின் தயாரிப்பாளர் எஸ்.பி. சௌத்ரி அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இயக்குநர் கின்ஸ்லின் கோவிட் தொற்றுக்கு முன்னர் என்னை சந்தித்து இப்படத்தின் கதையை விவரித்தார். அந்தத் தருணத்தில் கதையின் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இல்லை. ஏனெனில் அது மிகுந்த பொறுப்புடன் கூடிய பணி. மேலும் அந்த தருணத்தில் 'க / பெ ரணசிங்கம்' படத்தை முடித்துவிட்டு, நல்ல நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து, மிக மெதுவாக திரைத்துறையில் பயணிக்கலாம் என திட்டமிட்டிருந்தேன். ஆனால் டிரைவர் ஜமுனா படத்தின் கதையைக் கேட்டு ஒரே நாளில் இந்தப் படத்தில் நடிக்கலாம் என தீர்மானித்தேன்.

என்னுடைய திரையுலக அனுபவத்தில் ஒரு கதையைக் கேட்டு உடனே நடிக்க ஒப்புக்கொண்ட திரைப்படம் இதுதான். படப்பிடிப்பு தளத்தில் ஒவ்வொரு காட்சிக்கும் இயக்குநர், கதையின் சூழலையும், காட்சியின் சூழலையும் எளிதாக விவரித்ததால், சவாலான காட்சிகளில் கூட சரியாக நடிக்க முடிந்தது. என்னுடைய நடிப்புத் திறன் ரசிகர்களால் பாராட்டப்பட்டால். அதற்கான முழு புகழும் இயக்குநரையே சாரும்.

சின்ன பட்ஜெட் படங்களுக்கு ரசிகர்கள் திரையரங்கத்திற்கு வருவது குறைந்துவிட்டது. அதிலும் டிஜிட்டல் தளங்களின் ஆதிக்கத்திற்கு பிறகு பெருமளவில் குறைந்து விட்டது. ஆனால் சின்ன பட்ஜெட்டாக இருந்தாலும், ஒரு படம் வித்தியாசமானதாகவும், தரமானதாகவும் இருந்தால் அதற்கான ஆதரவு குறையவில்லை. 'டிரைவர் ஜமுனா' அந்த வகையிலான படம் என்பதால் நம்பிக்கையோடு இருக்கிறோம்.

எனக்கு கார் ஓட்டுவது மிகவும் பிடிக்கும். அதிலும் வேகமாக கார் ஓட்டுவேன். அதனால் சண்டை பயிற்சி இயக்குநர் அனல் அரசிடம் அனைத்து சண்டை காட்சிகளிலும், சாகச காட்சிகளிலும் டூப் போடாமல் நானே நடிக்கிறேன் என வாக்குறுதி அளித்தேன். இந்தப் படத்தில் லாரியுடன் நேருக்கு நேர் மோதும் ஒரே ஒரு காட்சியில் சிறிய பகுதியை தவிர, படம் முழுவதும் அனைத்து சண்டை காட்சிகளிலும், சாகச காட்சிகளிலும் நானே காரை ஒட்டினேன். படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் நெடுஞ்சாலைகள் தான் நடைபெற்றது. அதனால் மறக்க இயலாத அனுபவமாகவும் இருந்தது.

இவ்வாறு ஐஸ்வர்யா ராஜேஷ் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.