தமிழகத்துக்கு ஆளுநராக ஆர்,என்.ரவி நியமிக்கப்பட்ட போதே, மாநில அரசுக்கு குடைச்சல் கொடுக்கவே காவல் பின்புலம் கொண்ட ஒருவரை மத்திய பாஜக அரசு நியமித்துள்ளதாக விமர்சிக்கப்பட்டது.
கூட்டணி கட்சிகள் ஆர்.ர்ன்.ரவி நியமனத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தன. ஆனால், திமுக தரப்பில் இருந்து எவ்வித சலசலப்பும் இல்லாமல் இருந்தது.
இருப்பினும், அண்மைக்காலமாக ஆளுநருக்கும் திமுக தரப்புக்கும் இடையே உரசல்கள் ஏற்பட்டு வருகின்றன. நீட் தேர்வு விவகாரத்தில் இந்த மோதல் போக்கு அதிகரித்தது. ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப் பெற வேண்டும் என திமுக நாடாளுமன்றக் குழு தலைவர்
டெல்லியில் பகிரங்கமாக பேட்டியளித்தார்.
அதன் தொடர்ச்சியாக, ஆர்.என்.ரவி தமிழக அரசின் செயல்பாட்டிற்கு முட்டுக்கட்டையாக இருப்பதாக தொடர்ந்து திமுக கூட்டணி கட்சிகள் புகார் கூறி வருகின்றன. அரசு நிகழ்வுகள், பல்கலைக்கழக நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் ஆளுநர் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சித்தாந்தத்தை பரப்பி வருவதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது.
இந்த நிலையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்ப பெற வலியுறுத்தி குடியரசு தலைவருக்கு கடிதம் எழுத திமுக முடிவு செய்துள்ளது. குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட உள்ள அறிக்கையில் கையொப்பமிடுமாறு திமுக மற்றும் திமுகவின் தோழமைக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு அழைப்பு விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அழைப்பில், “ஒரே எண்ணம் கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, தமிழக ஆளுநரை உடனடியாக வாபஸ் பெறுவது தொடர்பாக, குடியரசுத் தலைவருக்கு அனுப்பும் கடிதத்தில் அண்ணா அறிவாலய தலைமையகத்திற்கு நேரில் சென்று படித்து கையொப்பமிடுமாறு திமுகவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.” என்று குறிப்பிட்டுள்ளார்.