இஸ்ரேல் பொதுத்தேர்தலில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு – மீண்டும் பிரதமராவாரா பெஞ்சமின் நேட்டன்யாஹூ..?

ஜெருசலேம்,

இஸ்ரேலில் நீண்டகாலம் பிரதமராக இருந்தவர் பெஞ்சமின் நேட்டன்யாஹூ. இவர் கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் மீண்டும் பிரதமர் பதவிக்கு போட்டியிட்ட நிலையில் அவரது லிகுட் கட்சி தேர்தலில் வெற்றி பெற்றபோதும் ஆட்சி அமைப்பதற்கு தேவையான பெரும்பான்மையை பெறவில்லை.

வலதுசாரி கட்சிகளுடன் கூட்டணி வைத்து ஆட்சி அமைத்த நிலையில், கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டு பெஞ்சமின் நேட்டன்யாஹூ தலைமையிலான அரசு சிறுபான்மை அரசாக மாறியது. இதனால் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு மீண்டும் தேர்தல் நடத்தப்பட்டது.

அப்போதும் பெஞ்சமின் நேட்டன்யாஹூவால் நிலையான ஆட்சியை அமைக்க முடியாததால் மீண்டும், மீண்டும் தேர்தல் நடத்தப்பட்டது. இப்படி 3 ஆண்டுகளில் 4 பொதுத்தேர்தல்கள் நடந்தன.

நாடாளுமன்றம் கலைப்பு

கடைசியாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் நடந்த தேர்தலிலும் எந்த கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்காத நிலையில், யாமினா என்ற கட்சியின் தலைவரான நப்தாலி பென்னட் சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்தார்.

இதன் மூலம் 2009 முதல் 2021 வரை தொடர்ந்து 12 ஆண்டுகள் பிரதமராக இருந்த பெஞ்சமின் நேட்டன்யாஹூ பதவியை இழந்தார்.

நப்தாலி பென்னட் தலைமையிலான அரசு சுமார் ஓராண்டு காலம் ஆட்சி செய்த நிலையில், கடந்த ஜூன் மாதம் அவரது அரசுக்கு வழங்கி வந்த ஆதரவை கூட்டணி கட்சிகள் திரும்பப்பெற்றன.

இதனால் அந்த நாட்டின் நாடாளுமன்றம் மீண்டும் கலைக்கப்பட்டு தேர்தலுக்கு தயாரானது. நவம்பர் மாதம் தேர்தல் நடக்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில் இடைக்கால பிரதமராக யாயிர் லாபிட் நியமிக்கப்பட்டார்.

பொதுத்தேர்தல்

இந்த நிலையில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி இஸ்ரேலில் நேற்று பொதுத்தேர்தல் நடந்தது. இது அங்கு 4 ஆண்டுகளில் நடந்த 5-வது பொதுத்தேர்தல் ஆகும்.

உள்ளூர் நேரப்படி காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்கு பதிவு இரவு 10 மணி வரை தொடர்ந்தது. நாடு முழுவதும் அமைக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான வாக்குச்சாவடிகளில் மக்கள் அதிகாலை முதலே நீண்டவரிசையில் காத்திருந்து தங்களின் ஜனநாயக கடைமையை ஆற்றினர். வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

வாக்குப்பதிவு முடிவடைந்தததும் உடனடியாக வாக்குகள் எண்ணும் பணிகள் தொடங்கின. தேர்தல் முடிவுகள் இன்று (புதன்கிழமை) வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மீண்டும் பிரதமராவாரா?

இந்த தேர்தலில் முன்னாள் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாஹூவுக்கும், இடைக்கால பிரதமராக இருக்கும் யாயிர் லாபிட்டுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.

எனினும் கடந்த தேர்தல்களை போலவே இந்த தேர்தலிலும் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் ஸ்திரமான ஆட்சி அமையாமல் போகலாம் என்று பெருவரியான கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

அதே வேளையில் பெஞ்சமின் நேட்டன்யாஹூ மீண்டும் பிரதமராவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் ஒரு சில கருத்து கணிப்பு முடிவுகள் கூறுகின்றன.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.