ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெலாட்டை, பிரதமர் நரேந்திர மோடி புகழ்ந்து பேசியதை எளிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என, காங்கிரஸ் மேலிடத்தை, சச்சின் பைலட் எச்சரித்து உள்ளார்.
1913 ஆம் ஆண்டு நடந்த மங்கார் படுகொலையை நினைவுகூரும் வகையில், மங்கார் தம் கி கவுரவ் கதா என்ற பெயரில் ராஜஸ்தான் மாநிலத்தின் பன்ஸ்வாரா என்ற பகுதியில் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில், பிரதமர் நரேந்திர மோடி, ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெலாட், மத்திய பிரதேச மாநில முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான், குஜராத் மாநில முதலமைச்சர் பூபேந்திர படேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெலாட்டை புகழ்ந்து பேசினார். அவர் பேசுகையில், “அசோக் கெலாட்டும், நானும் முதலமைச்சராக பணியாற்றி உள்ளோம். இந்தியாவில் உள்ள முதலமைச்சர்களிலேயே மிகவும் சீனியர் என்ற பெருமை அவருக்கு உள்ளது,” என தெரிவித்தார்.
இந்நிலையில் இன்று, இந்த விவகாரம் குறித்து, ராஜஸ்தான் காங்கிரஸ் எம்எல்ஏவும், மூத்தத் தலைவருமான சச்சின் பைலட் கூறியதாவது:
நேற்று நடைபெற்ற விழாவில், முதலமைச்சர் அசோக் கெலாட்டை பிரதமர் நரேந்திர மோடி புகழ்ந்து பேசியதை அனைவரும் கேட்டோம். மாநிலங்களவை உறுப்பினராக இருந்த குலாம் நபி ஆசாத்தின் பதவிக் காலம் முடிவடையும் போது பிரதமர் நரேந்திர மோடி இதே மாதிரி அவரை புகழ்ந்துப் பேசினார். அதன் பின்னர் என்ன நடந்தது என்பதை அனைவரும் பார்த்தோம்.
எனவே நேற்று நடைபெற்ற நிகழ்வை காங்கிரஸ் தலைமை எளிதாக எடுத்துக் கொள்ளக் கூடாது. ராஜஸ்தானில் ஒழுக்கமின்மை எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரம் வந்து விட்டது. நோட்டீஸ் அனுப்பப்பட்ட எம்எல்ஏக்கள் மீது புதிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.