தமிழ்நாட்டில் கடந்த 29-ம் தேதிமுதல் தொடங்கிய வடகிழக்கு பருவமழை, பல்வேறு மாவட்டங்களில் கன மழையாக பெய்துவருகிறது. மேலும் அடுத்த 3 நாள்களுக்குத் தமிழ்நாட்டில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வுமையம் நேற்று தெரிவித்திருந்ததது. அதைத்தொடர்ந்து சில மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையும் விடப்பட்டிருக்கிறது.
இப்படியிருக்க, மழைக்கு முன்னதாகவே தொடங்கப்பட்ட மழைநீர் வடிகால் பணிகள் தற்போது கொட்டும் மழையிலும் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. அதேசமயம், சென்னையில் நேற்று முழுவதும் கனமழை காரணமாக சில பகுதிகளில் மழைநீர் தேங்கியது. பல இடங்களில் தண்ணீர் தேங்கினாலும் உடனே வடிந்துவிட்டதாகவும் தகவல்கள் வெளியானது. இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சி தற்போது, ஒருநாள் மழைக்கே சென்னை தத்தளிக்கிறது என்றும், தமிழகம் முழுவதும் இயற்கைப் பேரிடரை எதிர்கொள்ள கூடுதல் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவர் ஆர்.தங்கவேலு வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் ஒரு நாள் மழைக்கே சென்னை தத்தளிக்கிறது. தொடர்ந்து கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கும் சூழலில், இன்னும் கூடுதல் ஏற்பாடுகளைப் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும். சென்னையில் பலநூறு கோடி மதிப்பில் மழைநீர் வடிகால் பணிகள் ஏற்கெனவே தொடங்கப்பட்டன. இதனால், முந்தைய ஆண்டுகளில் ஏற்பட்ட பாதிப்பு அளவுக்கு, தற்போதைய மழையின்போது பாதிப்பு ஏற்படவில்லை என்பது ஆறுதல் அளிக்கிறது. அதேசமயம், சென்னை புளியந்தோப்பில் பால்கனி இடிந்து விழுந்து ஒரு பெண்ணும், வியாசர்பாடியில் ஒரு ஆட்டோ டிரைவர் மின்சாரம் பாய்ந்தும் உயிரிழந்துள்ளனர். இனி ஒரு உயிரைக்கூட மழைக்குப் பறிகொடுக்காத அளவுக்கு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அவசியம்.
இன்னும் சில நாள்களுக்கு கனமழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ள நிலையில், தற்போதைய நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டும். சென்னை மட்டுமின்றி, பல்வேறு மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளதால், தமிழகம் முழுவதும் இயற்கைப் பேரிடரை எதிர்கொள்ள கூடுதல் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். பேரிடர் மேலாண்மை மற்றும் பருவமழையை எதிர்கொள்வதை ஒவ்வொரு நாளும் செய்யவேண்டிய பணியாகக் கருதி, ஆண்டு முழுவதும் இதற்கான தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம். மழையின்போது எந்த சாலையிலும் தண்ணீர் தேங்காத நிலையை உருவாக்குவது என்ற லட்சியத்தை வகுத்து, அதை அடையும் நோக்கில் செவ்வனே பயணிக்கத் தமிழக அரசு முன்வர வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் வலியுறுத்துகிறது” என்று கூறப்பட்டிருக்கிறது.