சியோல்: வட கொரியா இன்று (நவ.2) மட்டும் சுமார் 10 ஏவுகணை பரிசோதனைகளை நடத்தி இருக்கிறது என்று தென் கொரியா தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தென் கொரிய தலைமை ராணுவ அதிகாரி ஷின் சல் செய்தியாளர் சந்திப்பில் பேசும்போது, “வட கொரியாவின் செயல் நிச்சயம் ஏற்றுக் கொள்ள முடியாதது. வட கொரியா இன்று மட்டும் சுமார் 10 ஏவுகணை சோதனைகளை நடத்தியது. இந்த முறை ஏவுகணைகள் தென் கொரிய கடற்பகுதியில் விழுந்தது” என்றார்.
தென் கொரியாவும், அமெரிக்காவும் கொரிய கடற்பகுதியில் கூட்டாக ராணுவ பயிற்சி மேற்கொண்டுள்ளன. இதற்கு வட கொரியா கடும் கண்டனம் தெரிவித்தது. இது குறித்து கண்டன அறிக்கையை வட கொரியா வெளியிட்டது.
அதில், “அமெரிக்காவும் தென் கொரியாவும் வட கொரியாவுக்கு எதிராக ஆயுதப் படைகளைப் பயன்படுத்த முயற்சித்தால், வட கொரியா இதற்கான எதிர்வினையை தாமதிக்காமல் செய்யும். வரலாற்றில் மிக மோசமான விலையை அமெரிக்காவும், தென் கொரியாவும் கொடுக்க நேரிடும்” என்று தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த ஏவுகணை பரிசோதனையை வட கொரியா நடத்தியுள்ளது. வட கொரியாவின் இந்த நடவடிக்கையை அத்துமீறல் என்று ஐக்கிய நாடுகள் சபை கண்டித்துள்ளது.
இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் வட கொரியா இதுவரை 20-க்கும் மேற்பட்ட ஏவுகணை சோதனைகளை நடத்தி உலக நாடுகளை அதிர்ச்சியடையச் செய்திருக்கிறது. கரோனா காரணமாக மோசமான நிலையை அடைந்துள்ள பொருளாதாரத்தைக் கவனிக்காமல் வட கொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை மேற்கொள்வதிலேயே கவனம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.