குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தொல்லைகளை தடுக்க பிரதிநிதிகள் முயற்சிக்கலாம்-பகுதி சபா கூட்டத்தில் கலெக்டர் வேண்டுகோள்

நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் நகராட்சி வார்டு எண் 30ல் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு பகுதி சபா கூட்டம் நேற்று நடந்தது.நகர்மன்ற தலைவர் மாரிமுத்து வரவேற்றார். கலெக்டர் அருண்தம்புராஜ் தலைமை வகித்தார். தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் கவுதமன், நகராட்சி ஆணையர் ஸ்ரீதேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாகப்பட்டினம் நகராட்சி வார்டு எண் 30ல் புதிதாக தேர்வு செய்யப்பட்ட பகுதி உறுப்பினர்களை கலெக்டர் அருண்தம்புராஜ் அறிமுகம் செய்து வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:

முதல்வர் உத்தரவின்படி நாகப்பட்டினம் நகராட்சியில் உள்ள 36 வார்டுகளும் 4 பகுதியாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பகுதிக்கும் 4 பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த நாள் வரலாற்றில் மிகவும் முக்கியமான நாள். கிராமசபை கூட்டம் கிராமங்களில் நடத்தப்பட்டு அங்குள்ள பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படும். உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் நடத்துவது போல் நகர பகுதிகளில் வார்டு சபை, பகுதி சபை கூட்டம் நடத்த அரசு ஆணை வெளியிடப்பட்டு நடத்தப்படுகிறது.

புதிதாக தேர்வு செய்யப்பட்ட வார்டு பிரதிநிதிகள் தங்கள் பகுதி வார்டுகளில் உள்ள பொதுமக்கள் பிரச்னைக்கு முக்கியத்துவம் கொடுத்து அதை சம்பந்தப்பட்ட வார்டு கவுன்சிலரிடம் தெரிவிக்க வேண்டும். அவ்வாறு தெரிவிக்கப்பட்ட பிரச்னைகள் மீது காணப்பட்ட தீர்வுகள் குறித்து 3மாத காலத்திற்கு ஒரு முறை தங்களது வார்டுகளில் கவுன்சிலர் தலைமையில் கூட்டம் நடத்த வேண்டும். இதனால் வார்டுகளில் நிலவும் பொதுமக்கள் பிரச்னைகளுக்கு எளிதாக தீர்வு காணமுடியும்.

முதல்வர் அறிவித்துள்ள இந்த பகுதி, வார்டு பிரதிநிதிகள் நல்ல முறையில் பயன்படுத்தி கொண்டு தங்களது வார்டு நல்ல முன்னேற்றம் அடைய முயற்சி செய்ய வேண்டும். அரசியல் உள்நோக்கம் இன்றி பொதுமக்கள் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும். மழை காலம் தொடங்கி விட்டதால் தங்களது வார்டுகளில் வடிகால் வசதி, பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுடன் தொடர்பு கொண்டு பள்ளிக்கு தேவையான வசதி, தங்கள் குழந்தை படிக்கும் பள்ளியின் தேவைகள் குறித்து விவாதம் செய்யலாம். குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தொல்லை ஏற்பட்டால் அதை தடுக்க பிரதிநிதிகள் முயற்சி செய்யலாம்.

இது போல் நகர்மன்ற வளர்ச்சிக்கு தேவையான ஆரோக்கியமான விசயங்களை பிரதிநிதிகள் விவாதம் செய்ய வேண்டும். நகப்பட்டினம் மாவட்டத்திற்கு ரூ.1732 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் குடிநீர் பற்றாக்குறையை போக்க புதிதாக பைப்புகள் போடப்படவுள்ளது. ரூ.68 கோடி மதிப்பில் ஒவ்வொரு வீட்டிற்கும் தனித்தனியாக குடிநீர் குழாய் இணைப்புகள் கொடுக்கப்படவுள்ளது. கீழ்வேளூர் அருகே ஓடாச்சேரியில் இருந்து குடிநீர் விநியோகம் செய்ய தற்பொழுது 2 பேர்வெல் இயங்குகிறது.

இந்த திட்டத்தின் கீழ் கூடுதலாக இரண்டு போர்வெல் அமைக்கப்படவுள்ளது. கொள்ளிடத்தில் இருந்து நேரடியாக நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு புதிதாக குடிநீர்குழாய் இணைப்புகள் கொடுக்கப்படவுள்ளது. இதனால் சாலைகளில் ஆங்காங்கே பள்ளம் தோண்டப்படும். இதை நாகப்பட்டினம் நகராட்சி பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பொருத்து கொள்ள வேண்டும். ஏன்னெனில் திட்ட பணிகள் நிறைவு பெற்றவுடன் 2054 வரை குடிநீர் குழாய்களில் பாதிப்புகள் என்பது இருக்காது.

நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு குடிநீர் தட்டுப்பாடு என்ற பேச்சுக்கு இடம் ஏற்படாது. இது மட்டும் இன்றி நாகப்பட்டினம் நகராட்சியில் ரூ.60 கோடி மதிப்பில் மழைநீர் வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. நாகப்பட்டினம் புதிய பஸ்ஸ்டாண்ட் மேம்படுத்தப்பட்டுள்ளது. இதை எல்லாம் தவிர ரூ.60 கோடியில் புதிய திட்டப்பணிகள் செயல்படுத்த அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. இந்த திட்டங்கள் எல்லாம் நிறைவு பெறும்போது நாகப்பட்டினம் நகராட்சி தன்னிறைவு பெற்ற நகராட்சியாக மாறும்.

அரசு பொதுமக்களுக்காக இதை எல்லாம் செயல்படுத்தும் போது பொதுமக்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளை பாக்கி இல்லாமல் செலுத்த வேண்டும். குடிநீர் வரி, பாதாள சாக்கடை வரி, நகராட்சி குத்தகை பாக்கி போன்ற வரி இனங்களை பொதுமக்கள் உரிய காலத்தில் செலுத்த வேண்டும். கண்ட இடங்களில் குப்பைகள் கொட்டுவதை நிறுத்தி குப்பை இல்லா நகராட்சியாக மாற்ற உறுதி ஏற்க வேண்டும் என்றார்.

நகராட்சி பொறியாளர் ஜெயகிருஷ்ணன் நன்றி கூறினார். இதை தொடர்ந்து குழந்தைகள் பாதுகாப்பு குறித்து 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கவுன்சிலர்கள் அண்ணாதுரை, முகம்மதுநத்தர், சைல்ட்லைன் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஆக்சிலிபால் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.