பிரிஸ்பேன்,
20 ஓவர் உலகக்கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு பிரிஸ்பேனில் நடந்த ஆட்டம் ஒன்றில் இங்கிலாந்து-நியூசிலாந்து (குரூப்1) அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ஜோஸ் பட்லரும், அலெக்ஸ் ஹாலெசும் களம் புகுந்தனர்.
ஹாலெஸ் தொடக்கம் முதலே அதிரடி காட்டினார். பட்லர் 8 ரன்னில் வழங்கிய கேட்ச் வாய்ப்பை, வில்லியம்சன் அந்தரத்தில் பறந்து பிடித்தபடி பந்தை நழுவ விட்டார். இந்த பொன்னான வாய்ப்பை கெட்டியாக பிடித்துக் கொண்ட பட்லர் தன்னை நங்கூரம் போல் நிலைநிறுத்தி ரன்கள் சேகரித்தார். அணியின் ஸ்கோர் 81 ஆக உயர்ந்த போது ஹாலெஸ் 52 ரன்களில் (40 பந்து, 7 பவுண்டரி, ஒரு சிக்சர்) ஸ்டம்பிங் செய்யப்பட்டார்.
பட்லர் தனது பங்குக்கு 73 ரன்கள் (47 பந்து, 7 பவுண்டரி, 2 சிக்சர்) திரட்டிய நிலையில் ரன்-அவுட் ஆனார். பின்வரிசையில் லியாம் லிவிங்ஸ்டன் (20 ரன்) மட்டும் கணிசமான பங்களிப்பை வழங்கினார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுக்கு 179 ரன்கள் குவித்தது.
அடுத்து 180 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய நியூசிலாந்துக்கு கான்வே 3 ரன்னிலும், பின் ஆலென் 16 ரன்னிலும் இங்கிலாந்தின் வேகப்பந்து வீச்சுக்கு விக்கெட்டை பறிகொடுத்தனர். இதைத் தொடர்ந்து கேப்டன் வில்லியம்சனும், கிளென் பிலிப்சும் கைகோர்த்து அணியை சரிவில் இருந்து மீட்டாலும் ரன்தேவை அதிகரித்துக் கொண்டே போனதால் நெருக்கடி வளையத்தில் சிக்கினர். அதில் இருந்து அவர்களால் முழுமையாக மீள முடியவில்லை.
வில்லியம்சன் 40 ரன்னிலும் (40 பந்து, 3 பவுண்டரி), பிலிப்ஸ் 62 ரன்னிலும் (36 பந்து, 4 பவுண்டரி, 3 சிக்சர்) வீழ்ந்தனர். 20 ஓவர்களில் நியூசிலாந்து அணியால் 6 விக்கெட்டுக்கு 159 ரன்களே எடுக்க முடிந்தது. இதனால் இங்கிலாந்து 20 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரைஇறுதி வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டது. இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் புதிய சாதனை ஒன்று படைத்துள்ளார்.
சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த இங்கிலாந்து வீரர் என்ற பெருமையை ஜோஸ் பட்லர் பெற்றார். அவர் 100 ஆட்டங்களில் ஆடி ஒரு சதம், 18 அரைசதம் உள்பட 2,468 ரன்கள் எடுத்துள்ளார். இதுவரை முதலிடத்தில் இருந்த இயான் மோர்கன் (115 ஆட்டத்தில் 2,458 ரன்) 2-வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.