ஜாதி, மத பேதமின்றி ஒற்றுமையுடன் வாழ வேண்டும் : ரஜினி
பெங்களூரு : கன்னட திரையுலகின் 'ஸ்டார்' நடிகர்களில் ஒருவர் புனித் ராஜ்குமார் சமூக சேவைகளிலும் ஈடுபட்டவர். 2021 அக்டோபர் 29ல், மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருடைய மரணம் இந்தியத் திரையுலகத்தினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. புனித் ராஜ்குமாருக்கு கர்நாடக அரசு சார்பில் 'கர்நாடகா ரத்னா' விருது வழங்கும் விழா பெங்களூருவில் நேற்று நடந்தது. புனித் ராஜ்குமாருக்கு வழங்கப்பட்ட கர்நாடகா ரத்னா விருதை அவரது மனைவி அஷ்வினி பெற்றுக் கொண்டார்.
இதில் கலந்து கொண்டு நடிகர் ரஜினி பேசியதாவது : புனித் ராஜ்குமாரின் இறுதிச்சடங்கின் போது லட்சக்கணக்கான மக்கள் கூடினர். அது அவர் நடிகர் என்பதால் வந்த கூட்டம் அல்ல அவரது மனிதாபிமானம், ஆளுமைக்காக வந்த கூட்டம். அவர் கடவுளின் குழந்தை. ஜாதி, மத பேதமின்றி அனைவரும் ஒற்றுமையுடன் வாழ கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.