பிரதமர் மோடி தலைமையிலான அரசு, முதல் முறையாக பதவி ஏற்றதில் இருந்தே, கருப்பு பணம் ஓழிக்கவும், கள்ள நோட்டுகளை அகற்றவும் டிஜிட்டல் பரிமாற்றங்களை ஊக்குவித்து வருகின்றது. அந்த வகையில், இந்த டிஜிட்டல் கரன்சியானது நிச்சயம் முக்கிய பங்கு வகிக்கும் என அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது. இது நாட்டின் டிஜிட்டல் பொருளாதாரத்தினை வலுப்படுத்த உதவும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இது இந்தியாவில் பண பரிவர்த்தனையை அடுத்த இடத்திற்கு எடுத்து செல்லும் என்றும் கூறப்படுகிறது.
டிஜிட்டல் கரன்சி என்பது மின்னணு வடிவில் இருக்கும் ஒரு பிரத்யேக நாணயமாகும். இந்திய ரிசர்வ் வங்கி டிஜிட்டல் நாணயத்தை நேற்று சோதனை அடைப்படையில் அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது நவம்பர் 1 ஆம் தேதி செவ்வாய்கிழமை முதல் சோதனை முறையில் நாட்டின் முதல் டிஜிட்டல் கரன்சியை இந்திய ரிசர்வ் வங்கி நேற்று வெளியிட்டது. ரிசர்வ் வங்கியின் இந்த முன்முயற்சியில் ஒன்பது வங்கிகள் ஈடுபட்டுள்ளன. அவை பாரத ஸ்டேட் வங்கி, பாங்க் ஆப் பரோடா, யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா, HDFC வங்கி, ICICI வங்கி, கோடக் மஹிந்திரா வங்கி, யெஸ் பேங்க், IDFC ஃபர்ஸ்ட் பேங்க் மற்றும் HSBC ஆகிய வங்கிகள்.
சில்லறை பங்கு வாடிக்கையாளர்களுக்கான டிஜிட்டல் நாணய பயன்பாடு, சோதனை அடிப்படையில் ஒரு மாதத்திற்குள் தொடங்கப்படும் என்றும், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. பணத்தின் மீதான மக்களின் சார்பு, இப்போது டிஜிட்டல் நாணயம் மூலம் குறைக்கப்படும். மேலும் சில வழிகளில், மொத்த விற்பனை பரிவர்த்தனைகளுக்கு இது ஒரு சிறந்த தீர்வாக இருக்கும். பரிவர்த்தனை தற்போது ரொக்கம், ரூபாய், காசோலைகள் அல்லது வேறு ஏதேனும் நிதி அமைப்பு மூலம் மேற்கொள்ளப்படுகிறது. இருப்பினும், ரொக்க பணத்திற்கான தேவைக்கு மாற்றாக டிஜிட்டல் நாணயம் இருக்காது. வாலெட்டில் இருந்து வாலெட்டிற்கு செலுத்தும் பண பரிவர்த்தனைகள் சாத்தியமாகும்.
மத்திய வங்கி டிஜிட்டல் நாணயம் என்பது ஒரு நாட்டின் முக்கிய நாணயத்தின் டிஜிட்டல் வடிவமாகும். இது மத்திய வங்கியால் வெளியிடப்பட்டு ஒழுங்குபடுத்தப்படுகிறது. மேலும், குற்றச் செயல்களைத் தடுக்கிறது. சர்வதேச கட்டண ஆப்ஷன்கள் அதிகம் இருக்கும். பரிவர்த்தனைகள் செலவைக் குறைக்கிறது. இதனால், பணம் அனுப்பும் செலவு குறையும்.
கூகுள் பே, பேடிஎம் மற்றும் யுபிஐ இ-வாலட்டுகளிலிருந்து இதை வேறுபடுத்துவது எது?
இ-வாலட்டுகளுக்கு வரம்பு உள்ளது. ஆனால் டிஜிட்டல் கரன்சியில் அதிக பணத்தை அங்கு கொண்டு செல்லலாம். இருப்பினும், இதில் பாதுகாப்பும் ஒரு முக்கிய கவலையாக இருக்கும், எனவே அதை கவனிக்காமல் இருக்க முடியாது. தவறான எண்ணுக்கு பணம் மாற்றப்பட்டால் என்ன செய்வது என்பது மிகப்பெரிய கேள்வியாக வெளிவருகிறது. கூடுதலாக, ரிசர்வ் வங்கி இதன் பிரத்தியேக அம்சங்களை விரைவில் தெளிவுபடுத்தும்.
கரன்சி நோட்டுகள் காலாவதியாகுமா?
இதில் கரன்சிகள் காலாவதியாவதில்லை. தற்போது, இரண்டு லட்சம் முதல் ஐந்து லட்சம் வரை மாற்றுவது சவாலாக உள்ள நிலையில், தற்போது அவை எளிதாகிவிடும். மேலும், பணப் பரிமாற்றத்தை மேம்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஆன்லைன் வங்கியிலிருந்து இதை வேறுபடுத்துவது எது?
நெட் பேங்கிங்கில் பண பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் உண்டு. டிஜிட்டல் கரன்சி முறையில் கட்டணம் வசூலிக்கப்படாது.