அடிலெய்டு: வங்கதேசம் அணிக்கு எதிரான ‛டி-20′ உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 184 ரன்கள் குவித்தது. விராட் கோஹ்லி, ராகுல் அரைசதம் அடித்தனர்.
ஆஸ்திரேலியாவில் ‘டி-20’ உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. அடிலெய்டில் இன்று நடக்கும் ‘சூப்பர்-12′ சுற்றில், ‛குரூப்-2′ பிரிவில் இந்தியா – வங்கதேசம் அணிகள் மோதின. இதில் ‛டாஸ்’ வென்ற வங்கதேச அணி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, இந்திய அணிக்கு ராகுல், ரோகித் துவக்கம் தந்தனர்.
ரோகித் சர்மா 2 (8) ரன்னில் அவுட்டாகி வெளியேறினார். கடந்த சில ஆட்டங்களில் சொதப்பி வந்த ராகுல், இன்றைய போட்டியில் அதிரடியாக விளையாடினார். 32 பந்தில் 3 பவுண்டரி, 4 சிக்சர் உடன் அரைசதம் எட்டி அவுட்டானார். பின்னர் களமிறங்கிய சூர்யகுமார் தன் பங்கிற்கு 30 (16) சேர்த்தார். ஹர்த்திக் பாண்ட்யா (5), தினேஷ் கார்த்திக் (7), அக்சர் படேல் (7) ஏமாற்றினர். பொறுப்புடன் விளையாடிய விராட் கோஹ்லி அரைசதம் கடந்தார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் குவித்தது. கோஹ்லி 64 ரன்களுடனும், அஸ்வின் 13 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். வங்கதேசம் தரப்பில் ஹசன் முகமது 3 விக்., வீழ்த்தினார்.
கோஹ்லி சாதனை
இந்த போட்டியில் விராட் கோஹ்லி 16 ரன்கள் எடுத்தபோது புதிய சாதனையை நிகழ்த்தினார். டி-20 உலக கோப்பை போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற பெருமையை பெற்றார். இதற்கு முன்பு இலங்கையின் ஜெயவர்தனே 1016 ரன்கள் எடுத்திருந்தார். தற்போது விராட் கோஹ்லி 1,065 ரன்கள் எடுத்து முதலிடத்தில் உள்ளார்.
சூர்யகுமார் முதலிடம்
தொடர்ந்து அசத்தி வரும் இந்தியாவின் சூர்யகுமார் யாதவ் இந்த போட்டியில் 30 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் சர்வதேச ‛டி-20′ பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement