ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தொங்கு பாலத்தில் இளைஞர்கள் காரை ஓட்டிச் சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து, அந்த இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
உத்தர கன்னடா மாவட்டம் எல்லாப்பூர், ஜோய்டா தாலுகாக்களின் எல்லையில் சிவபுரா என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் ஓடும் காளி ஆற்றின் குறுக்கே தொங்கு பாலம் உள்ளது. இந்த பாலத்திற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம்.
இந்நிலையில், இந்த தொங்கு பாலத்திற்கு மகாராஷ்டிராவைச் சேர்ந்த சில இளைஞர்கள் காரில் சுற்றுலா வந்தனர். பின்னர் அந்த வாலிபர்கள் காரை தொங்கு பாலத்தில் ஓட்டிச் சென்றனர். இதற்கு சில சுற்றுலா பயணிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் எதிர்ப்பு தெரிவித்தவர்களை அந்த இளைஞர்கள் ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து அங்கு குவிந்த உள்ளூர் மக்கள் அந்த இளைஞர்களை திட்டினர். இதனால் வேறு வழியின்றி அந்த இளைஞர்கள் காரை பின்நோக்கி எடுத்துச் சென்றனர். தொங்கு பாலத்தில் இளைஞர்கள் காரை ஓட்டி வந்த காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. அந்த வீடியோவை பார்த்தவர்கள், காரை ஓட்டிவந்த இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.