நித்தம் ஒரு வானம் படம் எப்படி இருக்கு? திரை விமர்சனம்!

தன்னுடைய எதார்த்தமான நடிப்பில் நல்ல கதை அம்சம் கொண்ட படங்களை தேர்வு செய்து நடித்து வருபவர் அசோக் செல்வர்.  இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான படங்கள் அனைத்தும் ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றது.  தற்போது அறிமுக இயக்குனர் கார்த்திக் இயக்கத்தில் அசோக் செல்வன், ரீத்து வர்மா, அபர்ணா பாலமுரளி மேலும் பலர் நடித்துள்ள நித்தம் ஒரு வானம் படம் இந்த வாரம் நவம்பர் 4ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.  சென்னையில் தன்னுடைய குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார் அசோக் செல்வன், யாருடனும் பழகாமல் பேசாமல் தனக்கான ஒரு தனி உலகத்தில் ஒரு இண்ட்ரோவெர்ட் ஆக வாழ்ந்து வருகிறார்.  இவருக்கு ஒரு பெண்ணுடன் நிச்சயம் நடைபெற்று திருமணம் வரை செல்கிறது, ஆனால் எதிர்பாராத விதமாக அந்த திருமணம் நின்று விடுகிறது, இதனால் மன உளைச்சலில் அசோக் செல்வன் வேறு இரண்டு பேரின் வாழ்க்கையை பற்றி தெரிந்து கொண்டு அவர்களை தேடி செல்கிறார். இறுதியில் என்ன ஆனது என்பதே நித்தம் ஒரு வானம் படத்தின் கதை.

மூன்று வித்தியாசமான கதாபாத்திரங்கள் மற்றும் கெட்டப்களில் அசோக் செல்வன் அசத்தி உள்ளார். மூன்று கதாபாத்திரங்களுக்கும் தனி பாடி லாங்குவேஜ், பேச்சு என தன்னுடைய நடிப்பு ஆற்றலை வெளிப்படுத்தி உள்ளார்.  ரீத்து வர்மா, அபர்ணா பாலமுரளி, சிவாத்மிகா என மூன்று பெண் கதாபாத்திரங்களும் கதைக்கு முக்கியமானதாக உள்ளது. இவர்களின் அபர்ணா பாலமுரளி மட்டும் தனித்துவமாக தெரிகிறார்.  இவர்களை தவிர மேலும் சில ஹீரோயின்களும் படத்தில் உள்ளனர்.  அசோக் செல்வனுக்கு ஹீரோயின்களுக்கும் இடையே கெமிஸ்ட்ரி நல்லவிதமாக ஒர்க் ஆகி உள்ளது.

 

ஒரு காதல் கதையை வாழ்க்கை கதையாக கொடுக்க முயற்சி செய்திருக்கிறார் அறிமுக இயக்குனர் கார்த்திக். அவர் எடுத்த முயற்சில் முழுவதும் வெற்றியும் அடைந்துள்ளார். படம் இந்தியா முழுக்க பல்வேறு இடங்களுக்கு நகர்கிறது, தான் சொல்ல நினைத்ததை காட்சிகள் மூலம் வெளிப்படுத்த வேண்டும் என்பதில் இயக்குனர் குறிக்கோளாக இருந்துள்ளார் என்பது படம் பார்க்கும்போது தெரிகிறது. ஒரு விஷுவல் ட்ரீட் ஆகவும் நித்தம் ஒரு வானம் பாடம் உள்ளது.  முக்கியமாக படத்தின் ஒளிப்பதிவு மற்றும் பின்னணி இசை படத்திற்கு மிகவும் பக்கபலமாக உள்ளது.

திருமணம் நின்று போனதால் விரக்தியில் நிற்கும் ஹீரோ மனம் மாறும் காட்சி அற்புதம்.  எதார்த்தமான இந்த காதல் கதையில் எங்கும் போர் அடிக்காமல் செல்வதே படத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி.  பாடல்களும் பெரிதாக தொந்தரவு செய்யாமல் படத்தில் போக்கிலேயே செல்கிறது.  அசோக் செல்வனின் கற்பனை கதையில் ஒரு கதாபாத்திரமும், நிஜத்தில் தேடிச் செல்லும்போது வேறொரு கதாபாத்திரமும் இருப்பதால் அவர்களோடு நம்மால் கனெக்ட் செய்து கொள்ள முடியவில்லை, இது மட்டுமே படத்தில் வரும் குறையாக தெரிகிறது.  மற்றபடி குடும்பத்துடன் சேர்ந்து நிச்சயம் நித்தம் ஒரு வானம் படத்தை கண்டிப்பாக பார்க்கலாம்.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.