நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு: ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு சம்மன்!

நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடு வழக்கில், நாளை விசாரணைக்கு ஆஜராகும்படி, ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சர் ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத் துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பி உள்ளனர்.

ஜார்க்கண்ட் மாநிலத்தில், முதலமைச்சர் ஹேமந்த் சோரன் தலைமையில், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா – காங்கிரஸ் – ராஷ்ட்ரீய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடக்கிறது. முதலமைச்சர் ஹேமந்த் சோரனுக்கு உதவியாளராக இருக்கும் பங்கஜ் மிஸ்ரா சுங்கச்சாவடி ஒதுக்கீட்டில் ஊழல் செய்ததாக போலீசார் வழக்கு தொடர்ந்து உள்ளனர்.

இந்த வழக்கில் முதலமைச்சர் ஹேமந்த் சோரனுக்கு நெருக்கமான வேறு சிலரும் சிக்கி உள்ளனர். அவர்களுக்கு சட்ட விரோத நிலக்கிரி சுரங்க ஊழலிலும் தொடர்பு உள்ளது குறித்து அமலாக்கத் துறை

விசாரணை மேற்கொண்டது. சட்ட விரோத பணப் பரிமாற்ற குற்றச்சாட்டு தொடர்பாக, பங்கஜ் மிஸ்ரா மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் வீடுகள், அலுவலகங்கள் ஆகிய இடங்களில் சமீபத்தில் அமலாக்கத் துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.

மேலும், ராஞ்சியில் உள்ள முதலமைச்சர் ஹேமந்த் சோரனின் உதவியாளர் பிரேம் பிரகாஷ் வீட்டிலிருந்து இரண்டு ஏ.கே., 47 துப்பாக்கிகளையும், 60 குண்டுகளையும் அமலாக்க துறையினர் பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில் முதலமைச்சர் ஹேமந்த் சோரனின் உதவியாளர் பங்கஜ் மிஸ்ரா மற்றும் இருவரை அண்மையில் அமலாக்கத் துறை கைது செய்தனர்.

இந்த நிலையில், ஜார்க்கண்ட் நிலக்கரி சுரங்கங்களை ஒதுக்கியதில் முறைகேடு வழக்கு தொடர்பாக முதலமைச்சர் ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பி உள்ளது. ராஞ்சியில் உள்ள அலுவலகத்தில் நாளை (வியாழக்கிழமை) விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி சம்மனில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.