திருவனந்தபுரம் : கேரளாவில், திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயில் ஆராட்டு விழாவை முன்னிட்டு, விமான நிலையம் ஐந்து மணி நேரத்துக்கு மூடப்பட்டது.
திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயிலில் ஐப்பசி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆராட்டு நேற்று நடந்தது. பத்மநாப சுவாமி கோயிலில் இருந்து பத்மநாப சுவாமி, நரசிங்க மூர்த்தி, கிருஷ்ணர் உற்ஸவர்கள் ஆராட்டு பவனி சென்றன. இந்த பவனி திருவனந்தபுரம் விமான நிலைய ஓடுதளம் வழியாக செல்வதால், நேற்று மாலை 4:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை விமான நிலையம் மூடப்பட்டது.
இதுகுறித்து, திருவனந்தபுரம் விமான நிலைய அதிகாரி கூறியதாவது:
திருவனந்தபுரம் விமான நிலையம் 1932-ல் கட்டப்பட்ட போது, பத்மநாப சுவாமி ஆராட்டு பவனி பாதையின் குறுக்கே விமான ஓடுதளம் அமைந்தது. அப்போது இருந்தே ஆண்டு தோறும் பங்குனி மற்றும் ஐப்பசி ஆகிய மாதங்களில் நடக்கும் ஆராட்டு பவனியின் போது விமான நிலையம் மூடப்படும்.
மேலும், பத்மநாப சுவாமி பவனி வரும்போது, ஓடுதளத்தின் இருபக்கமும் திருவனந்தபுரம் விமான நிலையம் சார்பில், மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் அணிவகுத்து பாதுகாப்பு தருவர். உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து திருவனந்தபுரம் சர்வதேச விமானங்களுக்கும், இதுகுறித்து ஒரு வாரத்துக்கு முன்பே தகவல் கொடுத்து விட்டோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement