சென்னை: வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ள 1500 பேரிடர் மீட்பு படையினர் தயாராக உள்ளதாகவும், இதுவரை மழைக்கு 2 பேர் பலியாகி உள்ளனர். அவர்களுக்கு தலா ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கூறினார்.
பருவமழை பாதிப்பு, தடுப்பு நடவடிக்கை குறித்து, அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆா். ராமச்சந்திரன் இன்று அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர் களை சந்தித்தவர், வடகிழக்குப் பருவமழை தொடங்கிய நிலையில், சென்னை புளியந்தோப்பில் பால்கனி இடிந்து விழுந்து ஒரு பெண்ணும், வியாசர்பாடியில் மின்சாரம் பாய்ந்து ஒரு ஆட்டோ ஓட்டுநரும் என இதுவரை இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். அவர்கள், குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கப்படும். மேலும், வடகிழக்குப் பருவமழையால் இதுவரை மிகப்பெரிய பாதிப்பு இல்லை என்றார்.
பருவமழையை எதிர்கொள்ளத் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் 1500 பேர் தயார் நிலையில் உள்ளனர் என்று கூறியவர், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார். மழை பாதிப்பு காரணமாக பாதிக்கப்படும் மக்கள் தங்க வைக்க 5302 முகாம்கள்தயார் நிலையில் வைக்கப்பட்டுஉள்ளதாக கூறியவர், தற்போதைய நிலையில், எந்த முகாமிலும் யாரும் தங்க வைக்கப்படவில்லை என்றார். மழைநீரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது என்றார்.
வடசென்னை தாழ்வான பகுதி. ஆதலால் அங்கு மழைநீர் தேங்கியுள்ளது. அந்த பகுதிகளிலும் நடவடிக்கை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அனைத்து துறை அமைச்சர்களும் களத்தில் இருக்கிறார்கள். நகராட்சி துறை அமைச்சர், மின்சாரத்துறை, மருத்துவத்துறை அமைச்சர்கள் களத்தில் இருந்து வேலை செய்து வருகின்றனர்.
இதுவரை தமிழகம் முழுவதும் இருந்து 138 புகார்கள் வந்துள்ளது. அதில் 68 புகார்களுக்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் 70 அழைப்புகளுக்கு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது எனவும் தெரிவித்தார். சென்னையில் மட்டும் 38 புகார்கள் வந்துள்ளது. அதில் 25 புகார்கள் முடிந்துள்ளது. இதுவரை மிக பெரிய பிரச்சனை எதுவும் இல்லை. அனைத்தும் முதலமைச்சரின் நேரடி கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது.
செம்பரம்பாக்கம் ஏரி மொத்தம் 24 அடியாகும். அதில் 20.64 அடி நிரம்பியுள்ளது. தண்ணீர் தற்போது 116 கனஅடி நீர் வெளியேற்றபட்டு வருகிறது எனவும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.