பெங்களூரு: ஜம்மு – காஷ்மீரின் புல்வாமாவில், நம் ராணுவ வீரர்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலைக் கொண்டாடும் வகையில், சமூக வலைதளங்களில் பதிவிட்ட, பெங்களூரைச் சேர்ந்த இன்ஜினியரிங் மாணவருக்கு, ஐந்து ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு – காஷ்மீரின் புல்வாமாவில், ஜெய்ஷ் – இ – முகமது என்ற பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பினர், 2019ல் தற்கொலைப் படை தாக்குதல் நடத்தினர். இதில், சி.ஆர்.பி.எப்., எனப்படும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையைச் சேர்ந்த, 40 வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு ஆதரவாக, கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த, இன்ஜினியரிங் மாணவர் பயஸ் ரஷீத், சமூக வலைதளங்களில் பல பதிவுகளை வெளியிட்டிருந்தார். அப்போது, 19 வயதில் இருந்த அந்த மாணவர், தேசவிரோத சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த, என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பு சட்ட சிறப்பு நீதிமன்ற நீதிபதி கங்காதரா நேற்று அளித்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளதாவது:
புல்வாமா தாக்குதல் தொடர்பாக பல்வேறு ‘டிவி’ செய்தி நிறுவனங்கள் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவுகளுக்கு பதிலளித்து பயஸ் ரஷீத் பதிவிட்டுஉள்ளார். அந்தப் பதிவுகளில், நம் நாட்டுக்கு எதிராகவும், பயங்கரவாதிகளுக்கு ஆதரவாகவும், நம் வீரர்கள் கொல்லப்பட்டதை கொண்டாடும் வகையிலும் அவர் பதிவிட்டிருந்தார். இவ்வாறு, 23 பதிவுகளை அவர் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இவர் தெரிந்தே இந்தப் பதிவுகளை செய்துள்ளார். அவர் இன்ஜினியரிங் மாணவராக இருந்தவர். அதனால், அவரை சிறுவர் என்று கருத முடியாது.
தன் பதிவுகளில், ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதைக் கொண்டாடியதுடன்;மத ரீதியில் வெறுப்பை ஏற்படுத்தும் வகையிலும் அவர் பதிவிட்டுஉள்ளார். அவருக்கு பல்வேறு சட்டப் பிரிவுகளின்படி, ஐந்து ஆண்டு சிறை தண்டனை, 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. தேச விரோத சட்டத்தின் கீழான வழக்குகளில் எந்த நடவடிக்கையும் எடுப்பதற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதனால், அந்தப் பிரிவின் கீழ் தொடரப்பட்டுள்ள வழக்கு பின் தனியாக விசாரிக்கப்படும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement