புதுச்சேரி: கட்டாயப்படுத்தி மக்களை ஹெல்மெட் அணிய வைக்க முடியாது, அவர்களாகவே விருப்பப்பட்டு அணிவதுதான் நல்லது என்று போக்குவரத்து எஸ்பி மாறன் கூறியுள்ளார்.
புதுச்சேரியில் நவம்பர் 1 ஆம் தேதி முதல் இருசக்கர வாகனத்தை ஓட்டுவோர், பின்னால் அமர்ந்து செல்வோர் ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும் என கடந்த 29 ஆம் தேதி போக்குவரத்து (கிழக்கு-வடக்கு) எஸ்.பி. மாறன் அறிவிப்பு வெளியிட்டார். இதை மீறுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
ஹெல்மெட் இன்றி பயணித்தால் அபராதம் ரூ.1,000 மற்றும் 3 மாதத்துக்கு ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் என்ற அறிவிப்பு பலகையும் நகரின் பல இடங்களில் பொதுமக்கள் பார்வையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலும் போக்குவரத்து போலீஸார் ஒலிபெருக்கி மூலம் ஹெல்மெட் கட்டாயம் குறித்து பொதுமக்களிடையே எச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இதற்கிடையே ஹெல்மெட் காட்டாயம் அணியவேண்டும் என்பதற்கு அதிமுக உள்ளிட்ட கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
திமுக தரப்பில் எதிர்க்கட்சி தலைவர் சிவா தலைமையில் திமுக எம்எல்எக்கள் முதல்வர் ரங்கசாமியை சந்தித்து, புதுசே்சசேரி நகர், புறநகர் மற்றும் 40 கிலோ மீட்டர் வேகத்துக்கு செல்ல முடியாத சாலைகள், திருமண மண்டபம், கோவில்கள் உள்ளிட்ட பகுதிகளில் கட்டாய ஹெல்மெட் திட்டத்தை ரத்து செய்ய போக்குவரத்து காவல்துறைக்கு பரிந்துரைக்க வேண்டும்.
அபராதம் விதிக்கும் உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என மனு அளித்தனர். அதன்பேரில், மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் ஹெல்மெட் அணியாதவர்களுக்கு அபராதம் வசூலிப்பதில் இருந்து விலக்கு அளிக்க காவல்துறைக்கு முதல்வர் பரிந்துரை செய்வதாக உறுதியளித்தார்.
இதனால் போக்குவரத்து போலீஸாரும் பொதுமக்களிடம் கெடுபிடி காட்டவில்லை. இதன் காரணமாக பொதுமக்கள் எப்போதும் போல் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்து வருகின்றனர். இந்நிலையில் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்தும், ஹெல்மெட் அணிய வலியுறுத்தியும் எஸ்.பி. மாறன் தலைமையில் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போக்குவரத்து போலீஸார் காமராஜர் சிலை அருகே இன்று ஒலி பெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
ஹெல்மெட் அணிந்து வந்தவர்களுக்கு இனிப்பு கொடுத்து ஊக்கப்படுத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.பி. மாறன் கூறுகையில், “பலர் ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனம் ஓட்டி வருகிறார்கள். அவர்களைபோல் மற்றவர்களும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். நாங்கள் கட்டாயப்படுத்திதான் மக்களை ஹெல்மெட் அணிய வைக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை.
அப்படிச் செய்தால் அது நீண்ட நாட்களுக்கு நிற்காது. இருசக்கர வாகன விபத்தில் முதலில் தலையில்தான் அடிபடுகிறது. எனவே, மக்களுடைய பாதுகாப்பு மக்களிடம்தான் உள்ளது. தினமும் புதுச்சேரிக்கு 3 லட்சம் வாகனம் வருகிறது. அனைவருக்கும் அபராதம் போட்டு ஹெல்மெட் அணிய வைப்பது முடியாத காரியம். மக்களே தினமும் விருப்பப்பட்டு ஹெல்மெட் அணிவதுதான் நல்லது. இதனால் விபத்தும், உயிரிழப்புகளும் குறையும்.
நேரு வீதியில் ஒரு பக்கமாக வாகனங்களை பார்க்கிங் செய்யும் முறையை இன்று முதல் அமல்படுத்தியுள்ளோம். இதன் மூலம் நேரு வீதியில் மக்கள் சிரமமின்றி செல்வதை பார்க்கலாம்.” என்று எஸ்.பி. மாறன் கூறினார்.