சென்னை: தமிழ்நாட்டைச் சேர்ந்த மதிமுகவின் தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ, தெலுங்கானா மாநிலத்தில் நடைபயணம் மேற்கொண்டு வரும் ராகுலுடன் இணைந்து நடைபயணம் மேற்கொண்டார்.
குமரி முதல் காஷ்மீர் வரையிலான ஒற்றுமையை யாத்திரையை ராகுல் மேற்கொண்டு வருகிறார். இந்த யாத்திர தமிழ்நாடு, கேரளா, கர்நாடக, ஆந்திர மாநிலங்களைக் கடந்து தற்போது தெலுங்கானா மாநிலத்தில் நடைபெற்று வருகிறது. ராகுல் காந்தி இன்னும் 5 நாள்கள் தெலங்கானாவில் நடைபயணம் மேற்கொள்ள உள்ளார். அவரது நேற்றைய பயணத்தின்போது, 2016ஆம் ஆண்டு தற்கொலை செய்துகொண்ட ரோகில் வெமுலாவின் தாயார் கலந்து கொண்டார்.
இந்த நிலையில், இன்று ஐதராபாத்தில் நடைபெறும் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ நடைபயணத்தில் மதிமுக தலைவர் வைகோவின் மகனும், மதிமுகவின் தலைமை நிலைய செயலாளருமான துரை வைகோ கலந்து கொண்டார். கிட்டத்தட்ட இரண்டு மணி நேரங்கள் ராகுல் காந்தியுடன் நடந்து வந்தார். காலை உணவை இருவரும் சேர்ந்தே உட்கொண்டனர். அதைத்தொடர்ந்து இருவரும் சுமார் 45 நிமிடங்கள் சந்தித்துபேசினார்.