பல்வேறு தரப்பிலிருந்து வந்த கோரிக்கைகளை ஏற்று இந்த ஆண்டும், இனிவரும் ஆண்டுகளிலும் மாமன்னர் ராஜராஜசோழனின் பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் இன்று அறிவித்திருந்தார்.
முதல்வரி்ன் இந்த அறிவிப்பை வரவேற்றுள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, திமுக அரசுக்கு முக்கிய கோரிக்கை ஒன்றையும் முன்வைத்துள்ளார். இதுதொடர்பாக அர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “மாமன்னர் ராஜராஜ சோழனின் பிறந்த தினத்தை அரசு விழாவாக அறிவித்த தமிழக அரசுக்கு
@BJP4TamilNadu சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
அகில உலகம் போற்றும் தஞ்சை பெரிய கோவில் கண்ட மாமன்னர் ராஜராஜ சோழனின் நினைவிடம் உடையாளூரில் உள்ளது. பராமரிப்பின்றி சிதலமடைந்த நிலையில் இருக்கும் மாமன்னரின் நினைவிடத்தை தமிழக அரசு புனரமைத்து அவ்விடத்தில் ஒரு மாபெரும் நினைவிடம் அமைத்திட வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை. இந்தக் கோரிக்கையை @CMOTamilnadu செயல்படுத்திட வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறோம்” என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
முன்னதாக, தஞ்சாவூரிலுள்ள மாமன்னர் ராஜராஜசோழன் மணிமண்டபம் மேம்படுத்தி பொலிவூட்டப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாிலின் அறிவித்திருந்தார்.
தஞ்சையை ஆட்சி செய்த சோழ மன்னர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் தஞ்சை- புதுக்கோட்டை சாலையில் நவநீதபுரம் ரவுண்டானா அருகே, தமிழ அரசின் சார்பில் மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.