ராமேசுவரம் ராமநாதசாமி கோயிலில் கடந்த 2001-ம் ஆண்டு புதிதாகத் தங்கத்தேர் செய்யப்பட்டது. இந்தத் தங்கத்தேரை மூன்றாவது பிராகாரத்தில் இழுத்து வந்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தி வந்தனர். ஆனால் தங்கத் தேர் பராமரிப்பு இல்லாமல் பழுதடைந்ததால் கடந்த 2011-ம் ஆண்டிலிருந்து நிறுத்தி வைக்கப்பட்டள்ளது.
இந்நிலையில் கடந்த ஆண்டு ராமேஸ்வரம் கோயிலில் ஆய்வு செய்த அமைச்சர் சேகர்பாபு, தங்கத்தேரை உடனடியாகப் பராமரித்து மீண்டும் பக்தர்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் என உத்தரவிட்டார்.
அதன்படி முடங்கிக் கிடந்த தங்கத்தேர் பழுது நீக்கப்பட்டு சீர்செய்யப்பட்டது. இதையடுத்துத் தேரை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்து பக்தர்கள் பயன்பாட்டிற்காக வடம் பிடித்து இழுத்துத் தொடங்கி வைத்தார். 12 ஆண்டுகளுக்குப் பிறகு தங்கத் தேர் மீண்டும் கோயில் பிராகாரத்தைச் சுற்றி வருவதைப் பார்க்க ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அமைச்சர் சேகர்பாபு, “ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் 12 ஆண்டுகளாக ஓடாமல் பழுதாகி இருந்த தங்கத்தேர், புதுப்பிக்கப்பட்டு மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. இதே போல் திருத்தணி மற்றும் சமயபுரம் கோயில்களில் உள்ள தேர்களும் மீண்டும் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. தங்கத் தேர் இழுக்க 12 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.2,000 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. தற்போதைய சூழலுக்கும் அதே கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது. புதிய கட்டணம் நிர்ணிப்பது குறித்துக் கலந்து ஆலோசனை செய்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். கோயிலில் சாமி சந்நிதி பிராகாரத்தில் தட்சிணாமூர்த்தி எதிரே பக்தர்களுக்கு இடையூறாக அமைக்கப்பட்டிருந்த தடுப்பு கம்பிகள் நிரந்தரமாக அகற்றப்பட்டும்” என்று கூறினார்.