மணிப்பூர் மாநில ஆளுநராகவும், மேற்குவங்க மாநில பொறுப்பு ஆளுநராகவும் இருப்பவர் தமிழகத்தை சேர்ந்த இல.கணேசன். இவரது மூத்த சகோதரரின் 80ஆவது பிறந்தநாள் விழா, வருகிற 3ஆம் தேதி (நாளை) சென்னையில் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் பங்கேற்குமாறு மேற்குவங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜிக்கு, இல.கணேசன் அழைப்பு விடுத்திருந்தார்.
அந்த அழைப்பை ஏற்று, விழாவில் பங்கேற்பதற்காக மம்தா பானர்ஜி அறிவித்திருந்தார். மேலும், இரண்டு நாள் பயணமாக சென்னை வரும் மம்தா பானர்ஜி, முதல்வர்
மற்றும் சில அரசியல் கட்சித் தலைவர்களை சந்திக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அதன்படி, இன்று மாலை சென்னை விமான நிலையம் வந்த மம்தா பானர்ஜியை விமான நிலையத்தில் அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன் வரவேற்றனர். இதையடுத்து, முதல்வர் ஸ்டாலினின் ஆழ்வார்பேட்டை இல்லத்துக்கு மம்தா பானர்ஜி வருகை புரிந்தார். அவரை பூங்கொத்து கொடுத்து ஸ்டாலின் வரவேற்றார். இந்த சந்திப்பின்போது, திமுக நாடாளுமன்றக் குழு தலைவர் டி.ஆர்.பாலு, கனிமொழி எம்.பி., நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
முதல்வர் ஸ்டாலினுடனான சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த மம்தா பானர்ஜி, ஸ்டாலினுடன் அரசியல் பேசவில்லை. தேர்தல், அரசியல் பற்றி எதுவுமே பேசவில்லை. இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்றார். அதேபோல், மேற்குவங்கத்துக்கு வருமாறு மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்தார் அதனை ஏற்றுக் கொண்டேன் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, 2019ஆம் ஆண்டு மறைந்த கலைஞர் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்டு, பொதுக்கூட்டத்திலும் மம்தா பானர்ஜி உரையாற்றியிருந்தார். நாடாளுமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில், பாஜகவுக்கு எதிராக மாநிலக் கட்சிகள், பாஜக எதிர்ப்பு கொள்கை கொண்ட கட்சிகள் ஒன்றிணைவது பற்றி தேசிய அளவில் விவாதங்களும், பேச்சுவார்த்தைகளும் நடைபெற்று வரும் நிலையில், மம்தா பானர்ஜி – ஸ்டாலின் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.