சென்னை: 3 மாதங்கள் வரை வைத்து பயன்படுத்தும் ஆவின் டிலைட் பசும்பாலை பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர் அறிமுகப்படுத்தினார்
தமிழகம் முழுவதும் தினசரி 40 லட்சம் லிட்டர் பாலை ஆவின் நிறுவனம் கொள்முதல் செய்கிறது. இந்தப் பால் சமன்படுத்தப்பட்ட பால் (நீலம்), நிலைப்படுத்தப்பட்ட பால் (பச்சை), நிறை கொழுப்பு பால் (ஆரஞ்சு), இருமுறை சமன்படுத்தப்பட்ட பால் (மெஜந்தா) மற்றும் டீமேட் (சிவப்பு) போன்ற வகைகளில் தினசரி 30 லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
தற்போது ‘ஆவின் டிலைட்’ என்ற பசும்பாலை பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர் அறிமுகப்படுத்தினார். இந்தப் பாலில் 3.5% கொழுப்பு மற்றும் 8.5% இதர சத்துக்கள் உள்ளது. இப்பாலினை 90 நாட்கள் வரை எவ்வித குளிர்சாதன வசதியின்றி வைத்து பயன்படுத்தலாம். மழைக் காலங்கள் மற்றும் பேரிடர் காலங்களில் பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி பால் கிடைத்திட ஆவின் டிலைட் மிகப் பெரிய பங்காற்றும் என்று ஆவின் நிறுவனம் தெரிவித்துள்ளது. 500 மில்லி லிட்டர் அளவு கொண்டு இந்தப் பால் பாக்கெட் 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.