மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் தமிழகத்தில் பெய்து வரும் வடகிழக்கு பருவமழை குறித்தும் மேற்கொள்ளப்பட வேண்டிய தொடர் நடவடிக்கைகள் குறித்தும் சிறப்பு ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தமிழகத்தில் பெய்து வரும் வடகிழக்கு பருவமழையினை எதிர்கொள்வதற்காக இதுவரை எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் சிறப்பு ஆய்வுக் கூட்டம் நடத்தினார்.
இக்கூட்டத்தில் அனைத்து மண்டல தலைமைப் பொறியாளர்கள், அனைத்து மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர்கள் காணொளி காட்சி மூலம் கலந்து கொண்டனர்,
இந்த ஆய்வுக் கூட்டத்தின் போது அமைச்சர் செந்தில் பாலாஜி தமிழ்நாட்டில் இதுவரை வடகிழக்கு பருவமழையினை எதிர்கொள்வதற்காக எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விரிவான ஆய்வினை காணொளி காட்சியின் வாயிலாக மேற்கொண்டார்.
ஆய்வின் போது, இது போன்ற மழைக் காலங்களில் உயர் அலுவலர்கள் அனைவரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தினருடனும், தீயணைப்பு துறையினருடனும் எப்பொழுதும் தொடர்பில் இருக்க வேண்டும் எனவும் அனைத்து அலுவலர்களும் தமது அலைபேசியை எந்தக் காரணம் கொண்டும் ஆஃப் செய்து வைக்கக்கூடாது எனவும், நுகர்வோரிடமிருந்து புகார்கள் வரும் பட்சத்தில் அதை உரிய முறையில் பரிசீலிக்க வேண்டும் என்றும், இதனை மீறுபவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் அனைவருக்கும் உத்தரவிட்டார்.
மழைக்காலங்களில், அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் மிகுந்த கவனத்துடனும், பொதுமக்களிடமிருந்து புகார்கள் எதுவும் வரப்பெற்றால் அதனை உதாசீனப்படுத்தாது அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட வேண்டும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி அனைவரையும் கேட்டுக் கொண்டார்.
செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, முதலமைச்சர் தலைமையில் ஆய்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு, ஒவ்வொரு துறைகளுக்கும் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் உத்தரவுகள் வழங்கினார். குறிப்பாக, மின்சார வாரியத்தை பொறுத்தவரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எடுக்கப்பட்ட நடவடிக்கையின் மூலமாக இந்த வடகிழக்கு பருவமழையினை எதிர்கொள்வதற்காக 18,380 மின்மாற்றிகள், 2,00,000 மின் கம்பங்கள் மற்றும் 5,000 கி.மீ. மின்கடத்திகள் கையிருப்பில் உள்ளன.
கடந்த 15.06.2022 முதல் 14,69,872 சிறப்பு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. அவற்றுள் 40,000 மின்கம்பங்கள் புதிதாக மாற்றப்பட்டிருக்கின்றன, சாய்ந்த நிலையில் இருந்த 32,685 மின் கம்பங்கள் சரிசெய்யப்பட்டிருக்கின்றன, புதியதாக 25,996 மின் கம்பங்கள் இடைச்செருகல் செய்யப்பட்டிருக்கின்றன, 1,17,789 இடங்களில் பலவீனமான இன்சுலேட்டர்கள் மாற்றப்பட்டிருக்கின்றன, இதுதவிர்த்து சுமார் 1,800 கி.மீ. பழைய மின்கம்பிகள் புதியதாக மாற்றப்பட்டிருக்கின்றன எனவும் தெரிவித்தார்.