புதுடெல்லி: அருணாசலப் பிரதேசத்தில் புதிதாக அமைய உள்ள விமான நிலையத்துக்கு, ‘டோன்யி போலா’ என பெயர் சூட்டுவதற்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அருணாசலப் பிரதேசத்தின் இடாநகரில் பசுமை விமான நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த விமான நிலையம் ஒன்றிய மற்றும் மாநில அரசின் பங்களிப்புடன் ரூ.649 கோடி மதிப்பீட்டில் கட்டமைக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், இந்த விமான நிலையத்துக்கு டோன்யி போலோ என பெயர் சூட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டு, அருணாசலப் பிரதேச அரசு தீர்மானம் நிறைவேற்றியது. இது சூரியன் (டோன்யி) மற்றும் நிலவு (போலோ) பற்றிய நீண்ட கால பழங்குடியின கருத்தை பிரதிபலிப்பதாக இருக்கிறது. இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில், இடாநகர் புதிய விமான நிலையத்துக்கு டோன்யி போலோ என பெயர் சூட்டும் முன்மொழிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.