குஜராத் என்றாலே பாஜகவின் கோட்டை என்று தான் பலருக்கும் நினைவில் தோன்றும். இம்மாநிலத்தில் கூட
காங்கிரஸ்
பலம் வாய்ந்து விளங்கும் விஷயம் ஒன்று இருக்கிறது. வாக்கு வங்கி அரசியலை பொறுத்தவரை சாதி வாரியாக, சமூக வாரியாக பிளவுபடுத்தி பார்ப்பதை தவிர்க்க இயலாது. அந்த வகையில் ST எனப்படும் பழங்குடியின மக்களின் வாக்குகள் குஜராத் மாநில அரசியலில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஏனெனில் அம்மாநில மக்கள் தொகையில் ஏழில் ஒரு பங்கு பழங்குடியின மக்கள் ஆவர். அதில் பில் (Bhil) எனப்படும் சமூகத்தினர் சரிபாதி எண்ணிக்கையில் இருக்கின்றனர்.
இந்த சமூக மக்களின் வாக்குகளை பெறுவதில் காங்கிரஸ் கட்சியே பிரதான பங்கு வகித்து வருகிறது. பாஜக தொடங்கப்பட்ட 80களில் இருந்து கணக்கில் எடுத்துக் கொண்டால் காங்கிரஸின் கையே ஓங்கியிருப்பதை பார்க்க முடிகிறது. ஒவ்வொரு தேர்தலிலும் பழங்குடியின மக்களின் 60 சதவீத வாக்குகளை பெற்று வந்துள்ளது. 1980ல் காங்கிரஸ் 58 சதவீதம், பாஜக 14 சதவீத வாக்குகளையும் பெற்றுள்ளன.
1985ஆம் ஆண்டு தேர்தலில் இதேநிலை தான் நீடித்தது. 90களுக்கு பிறகு நிலைமை மாறத் தொடங்கியது. குறிப்பாக 1995ல் காங்கிரஸை வீழ்த்தி பாஜக சற்று முன்னிலை பெற்றது. அதன்பிறகு 1998ல் பின்னடைவை சந்திக்க 2002ல் பாஜக முன்னேற்றம் கண்டது. இதையடுத்து 2007, 2012, 2017 ஆகிய தேர்தல்களில் காங்கிரஸ் கை ஓங்கியது. கடைசியாக நடந்த தேர்தலில் காங்கிரஸ் 46 சதவீதம், பாஜக 45 சதவீதம் என பழங்குடியின வாக்குகளை பெற்றனர்.
வெறும் ஒரு சதவீதம் மட்டுமே வித்தியாசம். இதேபோல் மொத்தமுள்ள 26 பழங்குடியின தொகுதிகளில் இரண்டு முறை (1995, 2002) மட்டும் தான் பாஜக அதிக எண்ணிக்கையில் வென்றுள்ளது. மற்ற தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியே அதிக இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது. கடைசியாக நடந்த 2017 சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் 17, பாஜக 9 தொகுதிகளில் வென்றது குறிப்பிடத்தக்கது.
ஒட்டுமொத்தமாக பார்க்கையில் குஜராத் மாநிலத்தின் பழங்குடியின மக்களின் வாக்குகளை பெறுவதில் பாஜக பெரிதும் முன்னேறி வந்துள்ளது. இம்முறை காங்கிரஸை கீழே தள்ளி மேலே வந்துவிடும் என்று அக்கட்சியினர் மார்தட்டி வருகின்றனர். இதற்கு சிக்கலை ஏற்படுத்தும் வகையில் ஆம் ஆத்மி கட்சி நுழைந்துள்ளது. தேசிய அரசியலில் டெல்லி, பஞ்சாப் மாநிலங்களை தொடர்ந்து அக்கட்சி குஜராத் பக்கம் தனது கவனத்தை திருப்பியுள்ளது.
டெல்லி மாடலை கையிலெடுத்து இலவச மின்சாரம், இலவச குடிநீர் என வரிசை கட்டி வாக்குறுதிகளை வாரி வழங்கி வருகிறார். பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி என மூன்று கட்சிகளும் பழங்குடியின வாக்குகளை குறிவைத்து காய்களை நகர்த்தி வருகின்றன. இதற்கான பலனை வரும் டிசம்பர் 8ஆம் தேதி பார்த்துவிடலாம். முன்னதாக டிசம்பர் 1, 5 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது.
மொத்தமுள்ள 182 தொகுதிகளில் பெரும்பான்மை பெற 92 தேவை. ஆனால் மூன்று இலக்கத்தில் விஸ்வரூபம் எடுக்க பாஜக விரும்புகிறது. அதற்கு காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் வாய்ப்பு ஏற்படுத்தி தருமா? ஏமாற்றம் அளிக்குமா? என்பது மில்லியன் டாலர் கேள்வியாக மாறியுள்ளது.