நல்கொண்டா: தெலங்கானா மாநிலம், நல்கொண்டா மாவட்டம், முனுகோடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. இத்தொகுதியில் காங்கிரஸ் எம்எல்ஏ.வாக இருந்த ராஜகோபால் ரெட்டி, திடீரென பாஜகவில் இணைந்து, தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். இதன் காரணமாக இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது.
ராஜகோபால் ரெட்டி தற்போது பாஜக வேட்பாளராக போட்டியிடுகிறார். இத்தேர்தலில், பாஜக, காங்கிரஸ் மற்றும் டிஆர்எஸ் கட்சிகள் இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது.
முனுகோடு சட்டமன்ற இடைத் தேர்தலில் வாக்காளர்களுக்கு அதிக பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக பல புகார்கள் தேர்தல் ஆணையத்திடம் கொடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், முனுகோடு தொகுதியில் உள்ள கொரட்டிகல் கிராமத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தங்களுக்கு சிலர் ஒரு கிராம் தங்க காசு கொடுப்பதாக கூறினர். ஆனால், இதுவரை வாக்காளர்களுக்கு தலா ரூ.3 ஆயிரம் மட்டுமே வழங்கியுள்ளனர். தங்க காசு வழங்காவிட்டால், நாங்கள் அக்கட்சிக்கு வாக்களிக்க மாட்டோம் என ஆர்ப்பாட்டம் செய்தனர். இதேபோன்று, கொரட்டிக்கல் கிராமத்தில் சில கட்சிகளின் வாக்குச்சாவடி முகவர் வீடுகளின் முன் சிலர் வாக்களிக்க கொடுத்த பணம் சரிவர வந்து சேரவில்லை என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.