இண்டிகோவை முந்திச் செல்லும் ஏர் இந்தியா… 'On Time' செயல்திறனில் சாதனை!

ஏர் இந்தியா, தொடர்ந்து மூன்றாவது மாதமாக, இண்டிகோவை விட சிறந்த வகையில், நேரம் தவறாமல் சரியான நேரத்தில் விமான சேவையை வழங்கும் இந்தியாவின் சிறந்த விமான நிறுவனமாகத் திகழ்கிறது. டாடா குழுமத்தால் கையகப்படுத்தப்பட்டதிலிருந்து, ஏர் இந்தியா, ஆன் -டைம் செயல்திறன் (OTP) கொண்ட சிற்ந்த நிறுவனமாக திகழ் வேண்டும் என்பதை இலக்காக கொண்டுள்ளது. இண்டிகோ விமான நிறுவனம், இதற்காக பெயர் பெற்றது என்பது அனைவரும் அறிந்ததே..

செப்டம்பரில், இண்டிகோவின் 84.1 சதவீத விமானங்கள் நேரம் தவறாமல் சேவையை வழங்கிய நிலையில், அதனுடன் ஒப்பிடும் போது ஏர் இந்தியாவின் 87.1 சதவீத விமானங்கள் சரியான நேரத்தில் சேவைகள் இருந்தன. இது ஜூன் மாதத்தில் முறையே 83.1 மற்றும் 84.5 சதவீதமாக இருந்தது என்று அறிக்கை மேலும் கூறியுள்ளது.

“விமான முன்கணிப்பு பராமரிப்பின் திறனை மேம்படுத்துவதற்காக நாங்கள் தகவல் தொழில்நுட்ப அமைப்புகளில் அதிக முதலீடு செய்துள்ளோம். விமான போக்குவரத்து நேரத்தை கண்காணிக்க சரியான அமைப்புகளை பயன்படுத்தி உறுதி செய்ய விரும்புகிறோம். மேஜிக் எதுவும் இல்லை. அனைத்து அமைப்புகளும் சரியாக செயல்படுவதை நாங்கள் உறுதி செய்தால் இலக்கை எட்ட முடியும்” என ஏர் இந்தியா தலைமை நிர்வாக அதிகாரி கேம்ப்பெல் வில்சன் கூறினார்.

இந்நிலையில், செயல்திறனை மேம்படுத்த விமான நிர்வாகத்தில் சில கடுமையான மாற்றங்களைச் செய்யுமாறு இண்டிகோ தனது கேபின் குழுவினரைக் கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது. விமானத்திற்குள் கடைசியாக பயணி அமர்ந்த, 60 வினாடிகளுக்குள் கேபின் கதவை மூட வேண்டும் என்பது அறிவுறுத்தல்களில் ஒன்றாகும். “கடைசி பயணி விமானத்தில் இருக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டால், 60 வினாடிகளில் கேபின் கதவு மூடப்படும். பயணிகள் இன்னும் கேபினில் தங்கள் இடத்தில் அமரும் நிலையில் இருக்கலாம்” என்று விமான நிறுவனம் விநியோகித்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திட்டமிடப்பட்ட புறப்படும் நேரத்திற்கு 15 நிமிடங்களுக்கு முன் கதவுகளை மூட வேண்டும் என்றும் அது கூறியுள்ளது. “சரியான நேரத்தில் சென்றடையும் செயல்திறனை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் ஒன்று, அனைத்து புறப்பாடுகளுக்கும் புறப்படும் நேரத்திற்கு 15 நிமிடங்களுக்கு முன் கதவை மூடுவதை உறுதி செய்வதாகும்” என்று அது மேலும் கூறியது.

மேலும், விமானிகள் தங்கள் விமானங்கள் புறப்படுவதற்கு குறைந்தது 75 நிமிடங்களுக்கு முன்னதாக விமான நிலையங்களை அடையுமாறு நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது. அவர்கள் புறப்படுவதற்கு 35 நிமிடங்களுக்கு முன் விமானத்திற்குள் அமர வேண்டும். கோவிட் -19 தொற்றுநோய்களின் போது பணிநீக்கம் செய்யப்பட்ட தரைப் பணியாளர்களை பணியமர்த்தும் வேகத்தையும் இண்டிகோ அதிகரித்துள்ளது.

மத்திய அரசு நிறுவனமாக இருந்த ஏர் இந்தியா நிறுவனம் தொடர்ந்து வருவாய் இழப்பில் இயங்கி வந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாகவே அந்நிறுவனத்தை விற்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வந்தது. இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் 27ம் தேதி ஏர் இந்தியா நிறுவனம் முழுமையாக, முறையாக டாடா நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. 69 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் ஏர் இந்தியா மகாராஜா, டாடா நிறுவனத்திடம் சென்றது குறிப்பிடத்தக்கது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.