பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கலந்து கொண்ட பேரணியில், மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், அவர் காயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அண்டை நாடான பாகிஸ்தானின் பிரதமராக இருந்தவர் இம்ரான் கான். இவர், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஆவார். பாகிஸ்தான் நாட்டில் பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வு உள்ளிட்ட காரணங்களால், இம்ரான் கான் தலைமையிலான அரசு, கடந்த சில மாதங்களுக்கு முன்பு கவிழ்ந்தது. இதை பொறுத்துக் கொள்ள முடியாத இம்ரான் கான், தனது தலைமையிலான அரசு கவிழ்க்கப்பட்டதற்கு வெளிநாட்டு சதி இருப்பதாகக் கூறி வருகிறார்.
இந்நிலையில், பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள வசிராபாத் நகரில் நடைபெற்ற பேரணியில், முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கலந்து கொண்டார். அப்போது பேரணியில் இருந்த மர்ம நபர், இம்ரான் கானை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இதில், இம்ரான் கானின் வலது காலில் குண்டு பாய்ந்து அவர் காயம் அடைந்ததாகக் கூறப்படுகிறது.
மீண்டும் இஸ்ரேல் பிரதமர் ஆகிறார் நேதன்யாகு – தேர்தலில் அபார வெற்றி!
இதை அடுத்து, அவரை சூழ்ந்த கட்சி நிர்வாகிகள், காரில் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இந்த சம்பவத்தில், மேலும் 5 பேர் காயம் அடைந்துள்ளனர். இதற்கிடையே துப்பாக்கியால் சுட்ட நபரை, போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. சம்பவ இடத்தில் ஏராளமான போலீசார் பாதுகாப்புப் பணியில் குவிக்கப்பட்டு உள்ளனர்.