புதுடெல்லி: மிகுந்த பரபரப்பு இடையே இரு கட்டங்களாக குஜராத் சட்டமன்ற தேர்தல் வரும் டிசம்பர் 1ம் தேதி மற்றும் 5ம் தேதி என 2 கட்டங்களாக நடைபெறும். வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 8ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. குஜராத் சட்டசபையின் பதவிக்காலம் அடுத்தாண்டு பிப்ரவரி 23ம் தேதியுடன் முடிவடைகிறது. அதற்கு முன்பாக அம்மாநில தேர்தலை நடத்துவது அவசியம்.
குஜராத்தில் கிட்டதட்ட கால் நூற்றாண்டாக பாஜ ஆட்சியில் உள்ளது. கடந்த தேர்தலின்போது மொத்தமுள்ள 182 தொகுதிகளில் பாஜ 99 இடங்களை கைப்பற்றியது. காங்கிரஸ் 77 இடங்களை பெற்று எதிர்க்கட்சியாக உள்ளது. அதனால் தற்போது நடைபெற உள்ள தேர்தலிலும் பாஜ- காங்கிரஸ் இடையேதான் போட்டி இருக்கும் என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சிம்ம ெசாப்பனமாக ஆம் ஆத்மி கட்சியும் இணைந்துள்ளது.
பஞ்சாப்பில் அக்கட்சி வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்துள்ளதை மனதில் வைத்து கொண்டு டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால், குஜராத்தில் எப்படியாவது பாஜவை வீழ்த்தி வெற்றி வாகை சூட வேண்டும் என்ற முனைப்பில் தீவிரம் காட்டியுள்ளார். இதனால் அவ்வப்போது குஜராத்துக்கு சென்று, பாஜவை குறைகூறி மக்களிடம் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். பல்வேறு வாக்குறுதிகளை அள்ளி வீசி வருகிறார். இம்முறை வெற்றி பெறுவோம் என காங்கிரஸ் கூறியுள்ளதுடன், வீடு வீடாக பிரசாரம் செய்வது நல்ல வரவேற்பை பெற்றுள்ளதாகவும் வலியுறுத்தியுள்ளது.
அதே நேரத்தில், பாஜவும் பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது. அதாவது, ஆண்டுக்கு 2 சிலிண்டர்கள் இலவசம் என்றும், வாட் வரி எனப்படும் மதிப்பு கூட்டு வரியை 10 சதவீதம் குறைத்தும் அதிரடி காட்டியது. பிரதமர் மோடிக்கும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கும் ஒரு கவுரவ போராகும். மேலும் மாநிலத்தில் வெற்றியை உறுதிசெய்ய எந்த எல்லைக்கும் செல்லும் என்பது நிதர்சனம். அதனால் பாஜக, ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் என மும்முனை போட்டி நிலவும் என்று தெரிகிறது.
இதனால் குஜராத் சட்டசபைக்கு தேர்தல் தேதி எப்போது அறிவிக்கப்படும் என்று பலரும் எதிர்பார்த்து வந்தனர். கடந்த மாதம் 15ம் தேதி இமாச்சலபிரதேச மாநிலத்திற்கான சட்டமன்ற தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்தது. அப்போதே குஜராத் தேர்தல் தேதியும் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அறிவிக்கவில்லை. விதிகளின்படியே தேர்தல் தேதி அறிவிப்புகள் வெளியாவதாக தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்திருந்தது.
இந்நிலையில், இன்று மதியம் 12 மணிக்கு குஜராத் சட்டமன்ற தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. டெல்லி ஆகாஷ் பவனில் உள்ள ரங் பவான் அரங்கத்தில், தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் இன்று வெளியிட்டார். பின்னர் நிருபர்களிடையே தேர்தல் ஆணையர் பேசியதாவது:
குஜராத் சட்டமன்ற தேர்தலில் புதிதாக 4.6 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். மொத்தம் 51,782 வாக்குச்சாவடிகளில் 4.90 கோடி வாக்காளர்கள் வாக்குப்பதிவு செய்ய உள்ளனர். அனைத்து வாக்குச்சாவடிகளும் தரைத்தளத்தில் அமைக்கப்படும். 80 வயதானவர்கள், 40 சதவீதம் திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் வீட்டிலிருந்து வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
2 கட்டமாக குஜராத் தேர்தல் நடைபெற உள்ளது. முதல்கட்ட வாக்குப்பதிவு டிசம்பர் 1ம் தேதி 89 தொகுதிகளுக்கும், 2ம் கட்ட வாக்குப்பதிவு டிசம்பர் 5ம் தேதி 93 தொகுதிகளுக்கும் நடைபெறுகிறது. முதல் கட்ட தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் நவம்பர் 5ம் தேதியும், 2ம் கட்ட தேர்தலுக்கு நவம்பர் 10ம் தேதியும் தொடங்குகிறது. வேட்புமனு திரும்ப பெற முதல்கட்டத்திற்கு நவ. 17 மற்றும் 2ம் கட்டத்திற்கு நவ. 21ம் தேதி கடைசி நாளாகும். வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 8ம் தேதி நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.