புதுடெல்லி: ‘மைனர்கள் பலாத்காரம் செய்யப்பட்டது பற்றி தெரிந்த பிறகும், அது பற்றி புகார் தராமல் இருப்பது கடுமையான குற்றமாக கருதப்படும்’ என உச்ச நீதிமன்றம் எச்சரித்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம், சந்திராபூர் மாவட்டம், ரஜூரா பகுதியில் உள்ள பள்ளியில் படிக்கும் பழங்குடியின சிறுமிகள் சிலர் அப்பள்ளியின் விடுதியில் தங்கி படித்து வந்தனர். விடுதியில் சில பழங்குடியின மாணவிகள் பலாத்காரம் செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் வெளியானது. இது தொடர்பாக குற்றவாளிகள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார், சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்டது தெரிந்திருந்திருந்தும் புகார் அளிக்காமல் மறைத்த தனியார் டாக்டர் ஒருவரையும் 6வது குற்றவாளியாக சேர்த்தனர்.
இதை எதிர்த்து அந்த டாக்டர் தரப்பில் மும்பை உயர் நீதிமன்ற நாக்பூர் கிளையில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் டாக்டர் மீதான எப்ஐஆர், குற்றப்பத்திரிகையை கடந்தாண்டு ஏப்ரலில் ரத்து செய்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து போலீஸ் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அஜய் ரஸ்தோகி, ரவிக்குமார் அமர்வு நேற்று அளித்த தீர்ப்பில், ‘குற்றம் நடந்திருப்பது தெரிந்தும், மைனர் குழந்தைக்கு எதிரான பாலியல் வன்கொடுமை பற்றி புகார் அளிக்காதது கடுமையான குற்றமாகும்.
இது பலாத்கார குற்றவாளிகளை பாதுகாக்கும் முயற்சியும் கூட. இவ்வாறு புகார் அளிக்கத் தவறுவது சட்டத்தின் நோக்கத்தையே தோற்கடித்துவிடும். எனவே, பலாத்காரம் நடந்திருப்பது தெரிந்தும் டாக்டர் அதுபற்றி புகார் தராததால் அவர் மீது போலீசார் எப்ஐஆர் பதிவு செய்தது செல்லும். அதை ரத்து செய்ய உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்கிறோம்,’ என உத்தரவிட்டது.