புதுச்சேரி: புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அனைத்து துறைகளும் தயார் நிலையில் உள்ளதாக, அம்மாநில முதல்வர் ரங்கசாமி கூறியுள்ளார். வழக்கமாக மழை தேங்கிய பகுதிகளில் தண்ணீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த இரண்டு நாட்களாக விட்டு, விட்டு மிதமழை பெய்து வருகிறது. புதுச்சேரி, காரைக்காலில் கனமழையால் இன்று அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறையை கல்வி அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்திருந்தார். கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கின. காலை முதல் புதுச்சேரியில் விட்டு, விட்டு மழை பெய்து வருகிறது. புதுச்சேரியில் கடற்கரை சாலை, காமராஜ் நகர், கோரிமேடு மற்றும் நகரப் பகுதிகளிலும், அரியாங்குப்பம், தவளக்குப்பம், பாகூர், ஊசுடு உள்ளிட்ட கிராமப்பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
தொடர்ந்து புதுச்சேரியில் வழக்கமாக மழை நீர் தேங்கும் தம்பு நாயக்கர் வீதி, புஸ்ஸி வீதி, செயின்ட் தெரசா வீதி பகுதிகளில் தண்ணீர் சிறிதளவு தேங்கியது. மின் விளக்குகளை எரியவிட்டுத்தான் வாகனங்களை மக்கள் இயக்கினர். கடல் சீற்றமும் புதுச்சேரியில் அதிகளவில் உள்ளது. தொடர்ந்து காற்றும் வீசியது. இச்சூழலில் கடலூர் சாலையில் நீதிமன்றம் அருகே, மின்கம்பிகள் உரசியதில் பெரிய மரத்தின் கிளை தீப்பிடித்தது. போக்குவரத்து வாகனங்கள் அதிகளவில் செல்லும் இப்பகுதி என்பதால் செல்வதால் மின்சப்ளையை நிறுத்தி தீயை அணைத்தனர்.
தொடர் மழை பொழிவினால் புதுச்சேரியில் உள்ள ஏரி, குளங்கள் நிரம்பி வருகின்றன. வாய்க்கால்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. வட கிழக்கு பருவமழையை எதிர்கொள்வது சம்மந்தமாக முதல்வர் ரங்கசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. சட்டப்பேரவை வளாகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் வருவாய்த் துறை, பொதுப்பணித்துறை, மின்துறை, சுகாதாரத் துறை, பேரிடர் மேலாண்மை துறை அதிகாரிகள் பங்கேற்று மழை காலங்களில் செய்யப்பட வேண்டிய பணிகள் மற்றும் நிவாரணம் குறித்து ஆலோசனை மேற்கொண்டனர்.
கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் ரங்கசாமி கூறுகையில், “வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள எதிர்கொள்ள அனைத்து துறைகளும் தயார் நிலையில் உள்ளது. புதுச்சேரியில் வரும் மழையை எதிர்கொண்டு மக்களுக்கு பாதுகாப்பு தருவோம். அதிகளவில் தண்ணீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். மக்களுக்கு எந்தவித இடர்பாடு இல்லாமல் மழையை எதிர்நோக்கும் அளவில் துறைகள் தயாராக உள்ளன.
தாழ்வான பகுதிகளில் உள்ள பொதுமக்களை தங்க வைக்க 9 பாதுகாப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் கூடுதல் இடங்கள் உருவாக்கப்படும். தினமும் மூன்றாயிரம் பொட்டலங்கள் வீதம் உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அட்சயா பாத்திர நிறுவனம் மூலம் தரமான உணவுகள் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வழக்கமாக பாதிக்கப்படும் நடேசன் நகர், இந்திரா காந்தி சிலை சதுக்கம், கிருஷ்ணா நகர், வெங்கடா நகர் உள்ளிட்ட பகுதிகளில் முன்பு போல் தண்ணீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.
தொடர்ந்து பாதிப்பு ஏற்பட்டால் சரி செய்ய அந்தந்த பகுதியில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் தொகுதி மக்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுப்பார்கள். மழை பாதிப்புகளைப் பொறுத்து தேவைப்படும் பட்சத்தில் மீட்பு குழு புதுச்சேரிக்கு வரவழைக்கப்படும். கடல் அரிப்பை தடுக்க கற்கள் கொட்டி வருகிறோம். ஒரு குழு ஆய்வு செய்து வருகிறது. அதைத்தொடர்ந்து அடுத்து நடவடிக்கை எடுப்போம். பள்ளிகளுக்கான விடுமுறையை மழையை பொருத்து முடிவு எடுப்போம்” என்று முதல்வர் கூறினார்.