சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாகத்தின் மீது பல்வேறு புகார்கள் எழுந்த நிலையில் கோவிலை ஆய்வு மேற்கொண்டு தணிக்கை செய்ய தமிழக அரசின் அறநிலையத்துறை குழு அமைத்தது. இந்த ஆய்வுக்குழு கடந்த ஜூன் 7 மற்றும் 8ம் தேதிகளில் ஆய்வு செய்தது. இந்த ஆய்வின் போது சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் போதிய ஒத்துழைப்பு வழங்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது.
அந்த ஆய்வில் நடராஜர் கோயில் செயல் அலுவலர் கட்டுப்பாட்டில் இருந்த பொழுது பெறப்பட்ட காணிக்கைகளை தணிக்கை குழு ஆய்வு செய்வார்கள் என சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. ஆனால் பக்தர்களிடமிருந்து பெறப்படும் காணிக்கைகளை தணிக்கை செய்ய அதிகாரம் இல்லை என தீட்சிதர்கள் தரப்பில் இருந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. சிதம்பரம் நடராஜர் கோயில் கணக்குகளை ஆய்வு செய்ய இந்து சமய அறநிலைத்துறையால் அமைக்கப்படும் குழுவுக்கு அதிகாரம் இல்லை என சுட்டிக்காட்டப்பட்டது.
இதனை அடுத்து கோயில் நிர்வாகத்தின் காணிக்கை தொடர்பான தணிக்கையில் தலையிடக்கூடாது என்பது தொடர்பான நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு நகலை தாக்கல் செய்யுமாறு சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாகத்திற்கு இந்து சமய அறநிலையத்துறை நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.