புதுடெல்லி: சீக்கியர்களுக்கு காலிஸ்தான் என்ற பெயரில் தனி நாடு உருவாக்கும் நோக்குடன் காலிஸ்தான் இயக்கம் உருவானது. 1980-ம் ஆண்டுக்குப் பிறகு இதற்கு பிந்தரன்வாலே தலைமை ஏற்று தீவிரவாதப் பாதைக்கு மாறினார். இதனால் தான் பஞ்சாபின் அமிர்தசரஸ் பொற்கோயிலில் பதுங்கியிருந்த சீக்கிய தீவிரவாதிகளை இந்திய ராணுவம் உள்ளே புகுந்து சுட்டுக் கொன்றது.
இதற்கான உத்தரவை அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி பிறப்பித்தார். இந்த நடவடிக்கைக்காக இந்திரா காந்தி 1984-ல் சுட்டுக் கொல்லப்பட்டார்.
காலிஸ்தான் தீவிரவாதப் பாதைக்கு மாறியது, அந்த இயக்கத்துக்கு தொடக்கம் முதல் ஆதரவளித்து வந்த பாகிஸ்தானுக்கு சாதகமானது. காஷ்மீரை தன்வசமாக்கும் நோக்குடன் காலிஸ்தான் தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் ஆதரவளித்து வருகிறது. இதில் தற்போது இந்திய சீக்கியர்களிடம் காலிஸ்தான் பெயரில் நட்பு பாராட்டி, நெருக்கமாக பாகிஸ்தான் தீவிரவாதிகள் அதிக தீவிரம் காட்டி வருகின்றனர். இந்த சதி வலையில் பாகிஸ்தானின் லாகூர் உள்ளிட்ட குருத்வாராக்களுக்கு வரும் இந்திய சீக்கியர்களை சிக்க வைக்க முயற்சிப்பதாக தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து இந்திய உளவுத் துறை அதிகாரிகள் மத்திய அரசுக்கு அளித்துள்ள அறிக்கையில், “லாகூரின் பஞ்சாப் சாஹிப் குருத்வாராவில் இந்தியாவிலிருந்து வந்த சில முக்கிய சீக்கியர்களை பாகிஸ்தான் தீவிரவாதிகள் சந்தித்து பேசியுள்ளனர். இங்குள்ள குருத்வாராக்களை சுற்றியுள்ள பகுதிகளிலும் இந்திய சீக்கியர்களை அவர்கள் சந்தித்து பேசுகின்றனர்.
இந்த சந்திப்புகளில் இந்திய அரசுக்கும் இந்துக்களுக்கும் எதிராக இந்திய சீக்கியர்களை திசை திருப்பும் வேலைகளிலும் அவர்கள் இறங்கியுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சமூக வலைதளங்களில் வெளியான படங்கள், வீடியோக்களை, மத்திய அரசு உடனடியாக நீக்கிவிட்டதாகக் கூறப்படுகிறது. 2024 மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணியை தோற்கடிப்பது பாகிஸ்தானின் நோக்கமாக உள்ளது. இத்துடன், சீக்கியர் மற்றும் இந்துக்கள் இடையே கலவரங்களை ஏற்படுத்தி இந்தியா வில் அமைதியை குலைக்கவும் பாகிஸ்தான் முயற்சிக்கிறது.
முஸ்லிம்கள் நிர்வகிப்பு: முஸ்லிம் நாடான பாகிஸ்தானின் பெரும்பாலான குருத்வாராக்களை முஸ்லிம்களே நிர்வகிக்கின்றனர். குருத்வாரா கமிட்டிகள் பலவற்றில் முஸ்லிம்கள் அதிகமாக இடம் பெற்றுள்ளனர். பாகிஸ்தான் குருத்வாராக்களை சுற்றிலும் கடை வைத்திருப்பவர்களும் முஸ்லிம்கள் என்பதால், இந்திய சீக்கியர்களை சந்திக்கும் சூழலாக இது தீவிரவாதிகளுகு பலன் தருகிறது.
1947-ம் ஆண்டு இந்தியப் பிரிவினையில் பஞ்சாபின் மூன்றில் இரண்டு பங்கு பாகிஸ்தான் வசமானது. எனினும், இந்தியாவின் பஞ்சாபைதான் காலிஸ்தான் எனும் பெயரில் தனிநாடாக்க 1970-களில் பிரிவினைவாதம் தொடங்கியது.
இதன் தாக்கம் பாகிஸ்தானின் பஞ்சாபில் இன்றுவரை பெரிதாக இல்லை. இதுபோன்ற காரணங் களால்தான் பாகிஸ்தான் தீவிர வாதிகள் தங்கள் நாட்டு எல்லை பஞ்சாபில் இருந்தாலும் ஜம்மு-காஷ்மீரின் எல்லைகளில் மட்டும் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
காலிஸ்தான் இயக்கத்தை முதன்முதலாக இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட வெளி நாடுகளில் இருந்த சில சீக்கியர்கள் தொடங்கினர். காலிஸ்தான் பிரி வினைவாதத்திற்கு அந்நாடுகளில் உள்ள சீக்கியர் அமைப்புகள் நிதி திரட்டி உதவி வருவது நினைவுகூரத்தக்கது.
பாகிஸ்தானின் பல குருத்வாராக்களை முஸ்லிம்களே நிர்வகிக்கின்றனர். குருத்வாரா கமிட்டிகள் பலவற்றில் முஸ்லிம்கள் அதிகமாக இடம் பெற்றுள்ளனர்.