திண்டுக்கல்: கொடைக்கானலில் நேற்று நள்ளிரவில் கொட்டித்தீர்த்த மழையால் மூங்கில் காட்டிற்கு செல்லக்கூடிய ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கொடைக்கானலில் நேற்று நள்ளிரவில் 3 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது.
இதன் காரணமாக கொடைக்கானல் நகர் பகுதிகளில் 3 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. மேலும் மழையின் காரணமாக கொடைக்கானலில் அனைத்து நீர்நிலைகளிலும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. கொடைக்கானல் அருகே உள்ள பள்ளங்கி கோம்பை, மூங்கில் காட்டிற்கு செல்லக்கூடிய பகுதியில் கனமழை காரணமாக ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்த வெள்ளப்பெருக்கின் காரணமாக மூங்கில் காட்டிற்கு செல்லக்கூடிய மக்கள் தவித்து வருகின்றனர். விவசாய பணிகளுக்கு செல்பவர்களும், பள்ளிக்கு செல்லக்கூடிய குழந்தைகளும் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மேலும் அப்பகுதியிலிருந்து வெளியே வருவதற்கு தற்காலிக பாலம் அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்துள்ளனர்.