கோவையில் மதநல்லிணக்க முயற்சி! கோட்டை ஈஸ்வரன் கோவிலுக்கு சென்ற ஜமாத் நிர்வாகிகள்

கோவை: கோவையில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில்  கார் வெடிப்பு சம்பவம் நிகழ்ந்த பகுதியில் உள்ள கோட்டை ஈஸ்வரன் கோவிலுக்கு அனைத்து ஜமாத் நிர்வாகிகள் சென்று அங்குள்ள பூசாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். கார் வெடிப்பு சம்பவத்தை வன்மையாக கண்டிக்கிறோம் எனவும் பயங்கரவாதத்திற்கு எப்போதும் இடம் கொடுக்க மாட்டோம் எனவும் அவர்கள் உறுதியளித்தனர். கோவையில் கடந்த 23ஆம் தேதி அதிகாலையில் நிகழ்ந்த கார் வெடிப்பு சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. கார் வெடித்ததில் ஒருவர் உயிரிழந்து விட்ட நிலையில் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் நடைபெற்ற கார் வெடிகுண்டு வழக்கு தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பின் அதிகாரிகள் விசாரணையை முடுக்கி உள்ளனர். இதனிடையே கார் வெடிப்பு நிகழ்ந்த இடத்திற்கு அருகில் உள்ள கோட்டை ஈஸ்வரன் கோயிலுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை எம்எல்ஏ வானதி சீனிவாசன் மற்றும் இந்த அமைப்புகளை சேர்ந்த பல்வேறு நிர்வாகிகளும் வந்து சாமி தரிசனம் செய்தனர். 

இவ்வாறான சூழலில்  இரு மதத்தினரிடையே சகோதரத்துவத்தை பாராட்டும் வகையிலும், மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையிலும் இன்று  அனைத்து ஜமாத்  கூட்டமைப்பு நிர்வாகிகள்  கோட்டை ஈஸ்வரன் கோவிலுக்கு வந்தனர். அவர்களை கோவில் அர்ச்சகர்கள் கைகூப்பி உள்ளே வரவேற்று அழைத்துச் சென்றனர். கோவில் பிரகாரத்தில் உள்ள அறையில் அமர்ந்த அவர்கள், அதே பகுதியில் பல தலைமுறைகளாக வசித்து வரும் தங்களது நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.

பின்பு கோவில் அர்ச்சகர்கள் ஜமாத் நிர்வாகிகளுக்கு பட்டுத் துண்டு அணிவித்து மரியாதை செய்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து நின்று  தோல் மேல் கை போட்டு  சகோதரத்துவம் பாராட்டி கொண்டனர்.இந்த நிகழ்ச்சிக்குப் பின்  ஜமாத் கூட்டமைப்பு நிர்வாகிகள் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய அனைத்து ஜமாத் கூட்டமைப்பு பொதுச் செயலாளர் இணையத்துல்லா, ’மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் நூறாண்டுகள் பழமை வாய்ந்த கோட்டை சிவன் கோயில் நிர்வாகிகளை சந்தித்தோம். ஏழு தலைமுறைகளாக இந்த கோட்டைமேட்டில் வசித்து வருகிறோம். இந்த கோட்டை ஈஸ்வரன் கோயிலை அனைவரும் மதிக்கிறோம். இங்கு அனைத்து மதத்தினரும்,  அண்ணன் தம்பிகளாக வாழ்ந்து வருகிறோம்’ என்று தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், ’கார் வெடிப்பு சம்பவத்தை  எங்கள் அமைப்புகள்  கண்டிக்கிறது. சிறுபான்மை மக்களோடு பெருபான்மை மக்கள்  சமூக நல்லிணக்கத்தோடு வாழ்வதையே விரும்புகிறோம்.  உங்களோடு நாங்கள் எங்களோடு நீங்கள் என்ற நோக்கத்தில் அனைத்து நல்ல விஷயங்களை முன்னெடுக்க உள்ளோம்.எவ்வித பயங்கரவாதத்திற்கும் இடம் கொடுக்க மாட்டோம். சிறுவயதிலிருந்து அனைவரும் ஒன்றாக இருந்தது குறித்து எல்லாம் பேசினோம். தேர் திருவிழாவின் போது ஒத்துழைப்பு கொடுத்தது எல்லாம் பேசினோம். இந்து முஸ்லீம் ஒற்றுமையை யாரும் சீர்குலைக்க முடியாது. அரசியல் தலைவர்கள் மதரீதியான பிரச்சனைகளை ஏற்படுத்த வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம். ஆன்மீகத்தையே பின்பற்றும் எங்களை அமைதியாக வாழ விடுங்கள்’ என கோரிக்கை.விடுத்தார்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.