சர்வதேச சிலை கடத்தல் மன்னனுக்கு 10 ஆண்டுகள் சிறை… சுபாஷ் சந்திர கபூரின் பின்னணி என்ன?!

வழக்கின் பின்னணி!

அரியலூர் மாவட்டம் சுத்தமல்லி வரதராஜபெருமாள் கோயிலில் கடந்த 2008-ல் 20 சாமி சிலைகள் காணாமல்போனது குறித்து சுத்தமல்லி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் எந்தவித முன்னேற்றமும் இல்லாததால், இவ்வழக்கு சிலை கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு மாற்றப்பட்டது. சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாரின் விசாரணையில் சுத்தமல்லி வரதராஜ பெருமாள் கோயிலில் இருந்த சிலைகள் வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டது தெரியவந்தது.

சுத்தமல்லி வரதராஜபெருமாள் கோவில்

சிலை கடத்தலின் பின்னணி!

சிலைகள் எப்படிக் கடத்தப்படுகின்றன என்பது குறித்து சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் மத்தியில் விசாரித்தோம். “திரைப்படங்கள் எடுக்கும் அளவுக்கு தமிழகத்தில் சிலை கடத்தல் சம்பவங்கள் அதிகரித்தன. அதிலும், அதிகம் அறியப்படாத கிராமங்களிலுள்ள, மக்கள் கூட்டம் அதிகமில்லாத ஊருக்கு ஒதுக்குப் புறமாகவுள்ள கோயில்கள்தான் சிலை கடத்தல் மாஃபியாக்களின் டார்கெட். அப்படியான கோயில்களில்தான், பாதுகாப்பும் அதிகம் இருக்காது. அப்படிப்பட்டக் கோயில்களைத் தேர்ந்தெடுத்து, இரவு நேரங்களில் சிலைகளைக் கடத்தியிருக்கிறார்கள்.

தமிழகத்தில் இது ஒரு சாமி சிலை. பூஜைகள், வழிபாடு தவிர வேறெதையும் மக்கள் செய்ய மாட்டார்கள். ஆனால், இப்படிப்பட்ட புராதன சிலைகளுக்கு ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் கிராக்கி அதிகம். கலைநயமிக்கச் சிலைகள் என்றால் எந்தவித ரிஸ்கும் எடுத்து, லட்சங்களில் பணத்தைக் கொடுத்து வாங்கிக்கொள்ள அந்தந்த நாடுகளில் பலர் இருக்கிறார்கள். அப்படி வாங்கப்படும் சிலைகளை, அந்த நாடுகளிலுள்ள அருங்காட்சியகத்தில் மக்கள் பார்வைக்கு வைத்து, அதன்மூலம் சிலைக்க்குச் செலவழிக்கப்பட்ட பணத்தை திரும்ப எடுத்துக்கொள்கிறார்கள். இன்னும் சில நாடுகளில் புராதன பொருட்களை ஏலம் விடுகையில், நம்மூர் சிலைகளையும் ஏலம் விட்டுப் பணத்தைக் கறந்துவிடுகிறார்கள்.

சிலை கடத்தல்

இந்தியாவிலிருந்து மட்டும் 50,000-க்கும் அதிகமான சிலைகளும், கலைப்பொருள்களும் வெளிநாடுகளுக்குக் கடத்தப்பட்டிருப்பதாக யுனெஸ்கோவின் அறிக்கை சொல்கிறது. அதேசமயம், தேசிய குற்ற ஆவணக்காப்பக புள்ளிவிவரப்படி, இந்தியாவில் சுமார் 70 லட்சம் சிலைகள் உள்ளன. இதில் சுமார் 13 லட்சம் சிலைகளுக்கு மட்டுமே முறையான ஆவணப் பதிவு உள்ளதாம். தமிழகத்திலுள்ள 36,500 கோயில்களில் கிட்டத்தட்ட 4.3 லட்சத்துக்கும் மேற்பட்ட சிலைகள் உள்ளன. இதில் கணக்கில் வராத சிலைகள் ஏராளம் இருக்கிறதாம். இவற்றில் சுமார் மூவாயிரம் சிலைகள் காணாமல் போயிருப்பதாகத் தமிழக இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது. கலைப்பொருள்கள் மற்றும் சிலைகள் மீதான சட்டவிரோத வர்த்தக மதிப்பு வருடத்துக்கு ரூ.40,000 கோடிக்கும் அதிகமாக நடக்கிறது என்கிறது இன்னொரு புள்ளிவிவரம்.

முதலில் சிலைகளைக் கடத்தி, அதுபற்றி அந்த ஊர் மக்களுக்குத் தெரியும் முன்னரே அந்த மாவட்டத்தை விட்டு இடத்தைக் காலிசெய்துவிடுவார்கள். நகரங்களிலுள்ள விமான நிலையங்கள் வழியாகவும், துறைமுகம் வழியாகவும் அத்தியாவசியப் பொருள் என்று லேபிள் இடப்பட்டு வெளிநாடுகளுக்குக் கடத்தப்படுகின்றன. நாங்கள் விசாரணையில் இறங்கும்போது, எந்தெந்த நாடுகளுக்குக் கடத்தப்பட்டிருக்கிறது என்பதை சுலபமாகக் கண்டறிந்துவிடுகிறோம். ஆனால், அங்கிருந்து மீட்டு வருவதுதான் குதிரைக் கொம்பாக இருக்கிறது. அருங்காட்சியகம் நடத்துபவர்களும், ஏலம் விடுபவர்களும் தனியார் என்றபோதும், இன்னொரு நாட்டிலிருந்து அங்கு சென்று எங்களுடைய சிலை கடத்தப்பட்டிருக்கிறது என்று சொல்லிக் கேட்டால் அவர்கள் கொடுப்பதில்லை. இந்திய தூதரகம் மூலம், அந்தந்த நாடுகளில் அரசுகளைத் தொடர்புகொண்டு, நிலைமையை எடுத்துச்சொன்ன பிறகுதான் சிலைகளை மீட்க முடிகிறது. அதுவும் நூற்றில் எழுபது சதவிகிதம்தான் வாய்ப்புள்ளது. என்றைக்கோ திருடுபோன சிலைகள்கூட பல ஆண்டுகள் கழித்துதான் மீட்கப்பட்டிருக்கின்றன!” என்றவர்கள், சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் சந்திர கபூர் குறித்தத் தகவல்களையும் பரிந்தனர்.

சுபாஷ் சந்திர கபூர்

சுபாஷ் சந்திர கபூர் பின்னணி!

“சுபாஷ் கபூரின் தந்தையான புருஷோத் ராம கபூரும் சிலை கடத்தல் தொழிலில்தான் இருந்திருக்கிறார். சுதந்திரத்துக்கு முன்பாக இருந்த ஒருங்கிணைந்த இந்தியாவில் லாஹூரைப் பூர்வீகமாகக் கொண்டவர் புருஷோத் ராம் கபூர். அங்கிருந்து பஞ்சாப் மாநிலத்துக்கு அவரின் குடும்பம் இடம்பெயர்ந்தது. அங்கிருந்து 1962-ல் புருஷோத் டெல்லிக்குச் சென்று, அங்கு கலைப் பொருள் விற்பனை நிறுவனம் ஒன்றைத் தொடங்கினார். அப்போதுதான் சிலைக் கடத்தல் கும்பலுக்கும், புருஷோத்துக்கும் பழக்கம் ஏற்பட்டது. ஒருமுறை புருஷோத், சுபாஷ் கபூருக்கும், சிலை கடத்தல் கும்பலுக்குமான மோதலில் சுபாஷ் கபூரின் காதில் காயம் ஏற்பட்டது. அதுதான், சுபாஷ் கபூரைப் பிடிக்கவும் போலீஸாருக்கு வழிவகுத்தது.

சுபாஷ் கபூர்

முக்கியமான பல அருங்காட்சியகங்கள் கூட சுபாஷிடமிருந்து சிலைகளை கோடிக்கணக்கான ரூபாய் பணம் கொடுத்துப் பெற்றிருக்கின்றன. இந்நிலையில், டி.எஸ்.பி செல்வராஜ் தலைமையிலான தமிழக சிலைக்கடத்தல் போலீஸாரால் 2008-ல் சஞ்ஜீவி அசோகன் என்ற சிலைக்கடத்தல் வியாபாரி கைது செய்யப்பட்டார். அதைத்தொடர்ந்து, அப்போதையை சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு அதிகாரி திலகவதியால், சுபாஷ்கபூருக்கு ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது.

இன்டர்போல் உதவியுடன் 2011-ல் சுபாஷ் கபூர் ஜெர்மனியில் கைது செய்யப்பட்டார். பொன்.மாணிக்கவேல் இந்தப் பிரிவுக்குப் பொறுப்பேற்ற பிறகு, சுபாஷ் கபூர் இந்தியா கொண்டுவரப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

சுபாஷ் கபூர்

இந்தியா, பாகிஸ்தான், கம்போடியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து சர்வதேச அளவில் 900 கோடி ரூபாய் மதிப்புள்ள 2,900 சிலைகள் மற்றும் கலைப்பொருள்களை கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கு நியூயார்க் குற்றவியல் நீதிமன்றத்தில் தற்போதும் நடந்துவருகிறது. பலமுறை ஜாமீன் கோரியும், சுபாஷ் கபூருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது. இந்திய கலைப் பொக்கிஷங்களைச் சட்டவிரோதமாக சுபாஷ் கபூர் கடத்தியதை, ஆதாரத்தோடு பிடித்து எட்டு ஆண்டுகள் கடந்து, தற்போதுதான் ஒரு வழக்கில் சுபாஷ் கபூருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. இன்னும் பல வழக்குகள், நீதிமன்றங்களில் நடந்துவருவது குறிப்பிடத்தக்கது!” என்பதோடு முடித்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.