சென்னை: சாலையில் ஓடிக்கொண்டிருந்த கார் தீப்பற்றி எரிந்த விபத்து பார்த்தவர்களை பதைபதைக்கச் செய்தது. இந்த எதிர்பாராத விபத்தால், அந்தப் பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தாம்பரம் தீயணைப்பு துறை இரண்டு வாகனங்கள் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். சென்னை தாம்பரம் அடுத்த பள்ளிக்கரணை பகுதியைச் சேர்ந்த அருண்குமார், தனது உறவினர் திருமணத்திற்காக தூத்துக்குடி சென்று விட்டு இன்று காலை வீடு திரும்பியுள்ளார். காரில் அருண்குமாரின் மைத்துனர் மற்றும் சித்தப்பா குழந்தைகளும் உடன் இருந்தனர்.
காரில் அவர்கள் வந்துக் கொண்டிருந்தபோது, வேங்கை வாசல் சந்தோஷபுரம் சிக்னல் அருகே தாம்பரம், வேளச்சேரி பிரதான சாலையில் பள்ளிக்கரணையில் கார் திடீரென தீப்பற்றி எரிந்தது. மகேந்திரா டியூவி என்ற வாகனத்தை ஓட்டி வந்துகொண்டிருந்த அருண்குமார் காரை நிதானமாகவே ஓட்டிவந்தார்.
திடீரென வாகனத்தில் அடைப்பு ஏற்படுவது போல வண்டி நின்று நின்று சென்றதால் வாகனத்தை சாலை ஓரமாக நிறுத்திவிட்டு வண்டியின் முன் பக்க பேனட்டை திறக்க சென்றார் அருண்குமார். அது திறக்கவில்லை, ஆனால் திடீரென இஞ்சின் இருக்கும் பகுதியில் இருந்து வெள்ளை நிறத்தில் புகை வர தொடங்கியது. பின்னர் கரும் புகையாக மாறியது.
சற்று நேரத்தில் வாகனம் கொழுந்துவிட்டு எரிய தொடங்கியது. காரை நிறுத்தியதும், அருண்குமாருடன் இருந்த, இரண்டு பெண்கள் 5 குழந்தைகள் உள்ளிட்ட ஒன்பது பேர் வாகனத்தை விட்டு இறங்கி நின்றுக் கொண்டிருந்தார்கள். அதனால், உயிர்ச்சேதம் எதும் ஏற்படவில்லை.
விபத்து குறித்து உடனடியாக தாம்பரம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே அங்கு விரைந்து வந்த தாம்பரம் தீயணைப்பு துறை மற்றும் பயிற்சி மையத்தைச் சேர்ந்த இரண்டு வாகனங்கள், சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இதனால் தாம்பரம் வேளச்சேரி பிரதான சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது சம்பவ இடத்திற்கு வந்த சேலையூர் போலீசார் மற்றும் பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு போலீசார், வாகனம் தீ பற்றியதுக்கான காரணம் குறித்து விசாரணை செய்து வருகிறார்கள்.