டெல்லியில், முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அவரது தலைமையிலான அமைச்சரவையில், சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தவர் சத்யேந்திர ஜெயின். உள்துறை, மின்சாரம், பொதுப்பணித் துறை, தொழில், நகர்ப்புற வளர்ச்சி ஆகிய முக்கிய இலாகாக்களையும் அவர் கூடுதலாக கவனித்து வந்தார்.
இதனிடையே, கடந்த 2017ஆம் ஆண்டு சத்யேந்திர ஜெயின் மற்றும் அவரது குடும்பத்தினர் ரூ.1.62 கோடி வரை பணமோசடி செய்ததாக சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. சிபிஐயின் முதல் தகவல் அறிக்கை அடிப்படையில் பணமோசடி குற்றச்சாட்டுகள் குறித்து அமலாக்கத்துறையும் விசாரணையைத் தொடங்கியது. தொடர்ந்து, சட்ட விரோதப் பணப் பரிமாற்ற வழக்கில் சத்யேந்திர ஜெயின் உள்பட மூன்று பேரை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர்.
இதையடுத்து, டெல்லி திகார் சிறையில் நீதிமன்ற காவலில் சத்யேந்திர ஜெயின் அடைக்கப்பட்டுள்ளார். அவரது சிறை அறைக்கு சென்று பார்க்க அவரது மனைவி பூனம் ஜெயினுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சத்யேந்திர ஜெயின் விவிஐபி வசதிகள் செய்து கொடுக்கப்படுவதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது.
சிறையில் சத்யேந்திர ஜெயினுக்கு மசாஜ் செய்யப்படுவதாகவும், அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அவருக்கு மசாஜ் செய்வதாகவும், அவரது மனைவி அனுமதிக்கப்பட்ட நேரத்தை விட கூடுதல் நேரம் சிறை அறையில் இருப்பதாகவும், ப்ரூட் சாலட் உள்ளிட்ட வெளியில் இருந்து கொண்டு வரப்படும் உணவுகள் அவருக்கு கொடுக்கப்படுவதாகவும் அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது. மேலும், சக சிறைவாசியான அன்குஷ் ஜெயின் என்பவரது மேற்பார்வையில் நபர் ஒருவரின் மூலம் சத்யேந்திர ஜெயினின் சிறை அறை சுத்தம் செய்யப்படுவதாகவும், அவரது தலையணை, மெத்தை விரிப்புகள் அடிக்கடி மாற்றப்பட்டு வருவதாகவும் அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகளையும் அமலாக்கத்துறை சமர்ப்பித்துள்ளது.
டெல்லி திகார் சிறை அம்மாநில அரசு கட்டுப்பாட்டின் கீழ் வருவதால், சத்யேந்திர ஜெயின் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாக டெல்லி தலைமை செயலாளரிடம் மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம் கேட்டுள்ளது. சத்யேந்திர ஜெயின் கவனித்த இலாக்காக்கள் துணை முதல்வர் மனீஷ் சிசோடியாவிடம் கூடுதலாக கொடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், டெல்லி அமைச்சரவையில் எந்தப் பொறுப்பும் இன்றி சத்யேந்திர ஜெயின் அமைச்சராக இருப்பதாகவும் சர்ச்சை எழுந்துள்ளது.
முன்னதாக, டெல்லி திகார் சிறையில் பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகளுக்காக ஆம் ஆத்மி முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு 10 கோடி ரூபாய் கொடுத்ததாக அரசியல் செல்வாக்கு தனக்கு உள்ளதாகக் கூறி பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டு வந்ததாக குற்றச்சாட்டுக்கு ஆளாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள சுகேஷ் சந்திரசேகர் கடந்த மாதம் டெல்லி துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனாவிற்கு திகார் சிறையில் இருந்தவாறே தனது வழக்கறிஞர் மூலம் எழுதிய கடிதம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த குற்றச்சாட்டுகள் மோர்பி பாலம் விவகாரத்தை மறைக்கவே கிளப்பி விடப்பட்டுள்ளதாக அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.