ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் T20 உலகக்கோப்பையில் தென்ஆப்பிரிக்கா- பாகிஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றன. பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி கட்டாயம் வெற்றி பெற்றால் மட்டுமே அரை இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியும்.
ஆனால் அரையிறுதிக்கு முன்னேறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ள நிலையில் இதற்குக் காரணம் பாபர் அசாமின் தலைமைதான் என்று பலரும் விமர்சித்து வருகின்றனர். சமீபத்தில்கூட பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர், பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாமின் கேப்டன்ஸி சரியில்லை என்று விமர்சித்திருந்தார்.
இதனிடையே பலரும் பாபர் அசாம்மை விமர்சித்து வந்த நிலையில் எங்கள் கேப்டன் ஃபார்ம் குறித்து யாரும் கவலைப்பட வேண்டாம் என்று பாகிஸ்தான் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான சதாப் கான் தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து அவர் பேசுகையில், ” பாபர் அசாம் உலகத்தரம் வாய்ந்த ஒரு வீரர். அவரும் ஒரு மனிதர்தான். சில நேரங்களில் அவர் தவறு செய்யலாம். இருப்பினும் அவர் எங்களுடைய சிறந்த கேப்டன். பல நேரங்களில் அவர் எங்களுக்கு ஆதரவாக இருந்திருக்கிறார். எனவே தற்போது அவருக்கு நாங்கள் ஆதரவாக உள்ளோம். மூன்று போட்டிகளில் சிறப்பாக விளையாடாததால் அவர் ஃபார்ம் குறித்து யாரும் கவலைப்பட வேண்டாம். தற்போது தென் ஆப்பிரிக்காவிற்கும் – பாகிஸ்தானிற்கும் நடைபெறும் போட்டியில் அதிக ரன்களைக் குவிப்பார் என்று எங்களுக்கு நம்பிக்கை உள்ளது” என சதாப் கான் தெரிவித்துள்ளார்.