செங்கோட்டை மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதி முகமது ஆரிஃப்புக்கு தூக்குதண்டனை! உச்சநீதிமன்றம் உறுதி

டெல்லி:  செங்கோட்டையில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதி முகமது ஆரிஃப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை உச்சநீதி மன்றம் உறுதி செய்துள்ளது. கடந்த 2000ம் ஆண்டில், செங்கோட்டையில் தாக்குதல் நடத்தப்பட்டதன் விளைவாக இரண்டு பாதுகாப்பு படை வீரர்கள் உள்பட மூவர் கொல்லப்பட்டனர்.

கடந்த 2000ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் 22ஆம் தேதி, நாட்டுக்குள் ஊடுருவிய லஷ்கர் இ தொய்பா என்ற பயங்கரவாத அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகள்  சிலர் கண்மூடித்தனமாக டெல்லி செங்கோட்டை உள்பட பல இடங்களல்  துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டனர்.  இந்த பயங்கரவாத தாக்குதலில், 7ஆவது ராஜ்புதானா ரைபிள்ஸ் பிரிவை சேர்ந்த சேர்ந்த இரண்டு ராணுவ வீரர்கள் உட்பட மூன்று பேரை அவர்கள் சுட்டுக் கொன்றனர்.

இதுதொடர்பாக விசாரணை நடத்தி வந்த காவல்துறை, பாகிஸ்தானைச் சேர்ந்த முகமது ஆரிப் என்ற பயங்கரவாதியை  டிசம்பர் 25, 2000 அன்று கைது செய்தனர். அவர்மீது வழக்கு விசாரணை நடைபெற்று, கடந்த 2005ம் ஆண்டு  அக்டோபர் 24, 2005 அன்று நீதிமன்றத்தால்  குற்றவாளி என அறிவிக்கப்பட்டு, அக்டோபர் 31, 2005 அன்று மரண தண்டனை விதிக்கப்பட்டது. அவரது மரண தண்டனையை டெல்லி உயர் நீதிமன்றம் செப்டம்பர் 13, 2007ஆம் ஆண்டு உறுதி செய்தது.

தனக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்து, பயங்கரவாதி ஆரிப் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த மனுவை 2011ஆம் ஆண்டு  ஆகஸ்ட் 28ந்தேதி அன்று உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இருப்பினும்,  2014ஆம் ஆண்டு, ஏப்ரல் 28ஆம் தேதி, அவரின் மரண தண்டனைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.

மேலும், மரண தண்டனை வழக்கில் தொடரப்படும் மறுசீராய்வு மனுக்கள் திறந்த நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டதையடுத்து, அவரின் மறுசீராய்வு மனுக்களை விசாரணைக்கு எடுத்து கொள்ள உச்ச நீதிமன்றம் 2016ஆம் ஆண்டு முடிவு செய்தது.  இதையடுத்து விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், தற்போது, அவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உச்சநீதிமன்றம்  இன்று உறுதி செய்தது

இந்த மறுஆய்வு மனுவை இந்திய தலைமை நீதிபதி யு.யு. லலித், நீதிபதி பேலா எம், திரிவேதி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. தீர்ப்பை வழங்கிய நீதிபதி யு.யு. லலித், “மின்னணு பதிவுகளை ஆதாரமாக எடுத்து கொள்வதை தவிர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை நாங்கள் ஏற்றுக்கொண்டோம். இருப்பினும், முழு விவகாரத்தை கருத்தில் கொண்டாலும் அவரது குற்றம் நிரூபணம் செய்யப்பட்டுள்ளது. இந்த நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை நாங்கள் உறுதி செய்கிறோம். மறுசீராய்வு மனுவை ரத்து செய்கிறோம்” என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.