டோக்கியோ,
வடகொரியாவின் அச்சுறுத்தல்களை சமாளிக்கும் விதமாக அமெரிக்க படைகள் கொரிய படைகளுடன் இணைந்து, ஆண்டுதோறும் கொரிய எல்லையில் கூட்டுப்போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.
இந்த கூட்டுப்போர் பயிற்சியை ஆத்திரமூட்டும் ராணுவ நடவடிக்கை என கூறி வடகொரியா தொடர்ந்து எதிர்த்து வருகிறது. இந்த சூழலில் வடகொரியாவின் எதிர்ப்பை மீறி கடந்த மாதம் அமெரிக்க மற்றும் தென்கொரிய படைகள் கொரிய எல்லையில் கூட்டுப்போர் பயிற்சியை தொடங்கின.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக வடகொரியா தொடர்ச்சியாக ஏவுகணைகளை ஏவி சோதனை செய்து வருகிறது. இந்த நிலையில் வடகொரியா நேற்று ஒரே நாளில் 23 ஏவுகணைகளை தென்கொரியா எல்லையை நோக்கி வீசியது. வானில் இருந்து புறப்பட்டு தரையில் உள்ள இலக்குகளை தாக்கும் இந்த ஏவுகணைகள் கிழக்கு மற்றும் மேற்கு கடற்கரையை நோக்கி வீசப்பட்டன.
இந்த நிலையில் இன்று வடகொரியா வீசிய ஒரு பாலிஸ்டிக் ஏவுகணை ஜப்பான் கடல் எல்லையை கடந்து பசிபிக் கடலில் விழுந்தது.இதனால் பெரும் பதற்றம் உருவானது.
இதையடுத்து ஜப்பான் பிரதமர் அலுவலகம் அவசர எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. ஜப்பான் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டனர். தங்கள் எல்லைக்குள் வடகொரியா ஏவுகணையை வீசியதற்கு ஜப்பான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.