டெல்லி செங்கோட்டையில் கடந்த 2000ஆம் ஆண்டு டிசம்பர் 22ஆம் தேதி தாக்குதல் நடத்தப்பட்டது. லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் நடத்திய இந்த தாக்குதலில் 2 ராணுவ வீரர்கள் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக, லஷ்கர் இ தொய்பா தீவிரவாதி முகமது ஆரிஃப் என்ற அஷாஃபாக் உள்ளிட்ட 6 தீவிரவாதிகள் உள்பட 11 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது.
டெல்லி கீழமை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில், முகமது ஆரிஃபுக்கு 2007ஆம் ஆண்டு செப்டம்பர் 13ஆம் தேதி மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. இந்த தண்டனையை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் முகமது ஆரிஃப் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. ஆனால், அவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை டெல்லி உயர் நீதிமன்றம் 2007ஆம் ஆண்டில் உறுதி செய்தது.
டெல்லி உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து முகமது ஆரிஃப் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இவ்வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் முகமது ஆரிஃபின் மேல் முறையீட்டை தள்ளுபடி செய்து, அவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உறுதி செய்து 2011ஆம் ஆண்டில் தீர்ப்பு அளித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து முகமது ஆரிஃப் உச்ச நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனுத் தாக்கல் செய்தார். இம்மனுவை உச்ச நீதிமன்றம், முகமது ஆரிஃபின் மறுசீராய்வு மனுவை தள்ளுபடி செய்து, அவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உறுதி செய்து உத்தரவிட்டது.