சென்னையில் தமிழக மீனவர்கள் மீது இந்திய கடற்படை துப்பாக்கிச்சூடு நடத்தியது, மாநில உரிமைகள் பறிப்பு போன்ற பல்வேறு விஷயங்களைக் குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அந்த ஆர்ப்பாட்டத்தில் திருமாவளவன் பேசியதாவது, “தமிழக கடற்பகுதியில் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த வீரவேல் என்ற இளைஞர் மீன் பிடிக்கச் சென்றுள்ளார். அவர்கள் சென்ற படகில் தேசியக் கொடியும் பறக்கின்றது. இவை அனைத்தையும் பார்த்து, இந்தியக் கடற்படை அவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதில், அந்த படகில் 45 துளைகள் உள்ளன. இந்த துப்பாக்கிச் சூட்டில் இளைஞரின் குடல் சேதமடைந்து விட்டது.
இப்போது, அவர் பிழைப்பது மிகவும் கடினமாக உள்ளது. இதுவரை நாம் இலங்கை கடற்படையினரை தான் எதிர்த்து போராடியுள்ளோம். ஆனால், முதல் முறையாக இந்திய கடற்படையினரை எதிர்த்து போராடும் அவலம். இந்த விவகாரத்தில், இந்திய கடற்படையினர் மீது வழக்குப்பதிவு செய்த தமிழ்நாட்டு காவல்துறையைப் பாராட்டுகிறோம். ஆனால் அவர்களைக் கைது செய்து, தமிழக அரசுக்கும் பவர் இருக்கு என்பதைக் காட்ட வேண்டும்.
இதையடுத்து, தற்போது அனைத்து விதமான படிப்புகளும் ஆங்கிலத்தில் தான் உள்ளது. அப்புறம் ஏன் அவர்களுக்கு இவ்வளவு வீராப்பு. தமிழைக் காப்போம். அனைத்து மொழிகளையும் மதிப்போம். இந்தி மொழியை எத்தனையோ இடங்களில் சொல்லிக் கொடுக்கிறார்கள். அதையெல்லாம் நாங்கள் போய் தடுக்கிறோமா. ஆனால், இந்தி திணிப்பைத்தான் எதிர்க்கிறோம். இந்தியாவில், ஆங்கிலம் ஏற்கனவே பயிற்று மொழியாக தான் இருக்கிறது.
இதில் சில பேர் இந்தி மொழியை தேசிய மொழி என்றும் தமிழை பிராந்திய மொழி என்றும் அழைக்கிறார்கள். இந்திய அரசமைப்பு சட்டத்தின் படி இந்தியாவின் தேசிய மொழிகள் மொத்தம் இருபத்திரண்டு. அதில் தமிழ் மொழியும் ஒன்று. இனி யாரவது தமிழை பிராந்திய மொழி என்று சொன்னால் செவுள்ளயே ஒன்னு வைங்க” என்று அவர் பேசியுள்ளார்.