சென்னை: தமிழ்நாட்டில் நேற்று (நவ.2) பெய்த மழையில் சுவர் இடிந்து விழந்ததில் ஒரு பெண் உயிரிழந்துள்ளதாகவும், 16 கால்நடைகள் இறந்துள்ளதாகவும், 52 குடிசைகள் மற்றும் வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை தகவல் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பான அரசின் செய்திக் குறிப்பு: தமிழ்நாட்டில் பரவலாக கனமழை பெய்துவரும் நிலையில் போர்க்கால அடிப்படையில் எடுக்கப்படும் நிவாரண நடவடிக்கைகள் குறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் இன்று (நவ.3) மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் ஆய்வு மேற்கொண்டார். நேற்றைய தினம் (நவ.2) தமிழ்நாட்டில் 38 மாவட்டங்களில் 18.01 மி.மீ மழை பெய்துள்ளது. இதில் மயிலாடுதுறை மாவட்டத்தில் மட்டும் மிக அதிக மழை (116.08 மி.மீ.) பெய்துள்ளது. மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் 220.0 மி.மீ. அதி கன மழை பெய்துள்ளது. நேற்று சென்னையில் 22.35 மி.மீ. மழை பெய்துள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் 220.0 மி.மீ. அதி கன மழை பதிவாகியுள்ளது. தஞ்சாவூர் மயிலாடுதுறை மாவட்டம் அணைக்காரன்சத்திரம் (கொள்ளிடம்) கடலூர் மாவட்டம் சிதம்பரம், சேத்தியாதோப்பு, அண்ணாமலை நகர், பரங்கிப்பேட்டை ஆகிய இடங்களில் மிக கன மழையும், கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில், லால்பேட்டை, ராமநாதபுரம் ஆர்.எஸ். மங்களம், கடலூர் மாவட்ட புவனகிரி, சிவகங்கை மாவட்டம் இளையான்குடி, மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி, மதுரை மாவட்டம் உசிலம்பட்டி, செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம், சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு ஆகிய இடங்களில் கனமழையும் பெய்துள்ளது.
தமிழ்நாட்டில் நேற்று பெய்த கனமழையின் காரணமாக, தேனி மாவட்டத்தில் சுவர் இடிந்ததில் ஒரு பெண் உயிரிழந்துள்ளார். 16 கால்நடை இறப்புகள் பதிவாகியுள்ளது. 52 குடிசைகள் / வீடுகள் சேதமடைந்துள்ளன. உயிரிழப்புக்கு உடனடியாக நிவாரணத் தொகை ரூ.4 லட்சம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிக்கு மட்டும் 17 கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் இதர மாவட்டங்களுக்கு மொத்தம் 37 கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் கனமழை காரணமாக விழுந்த 14 மரங்கள் அகற்றப்பட்டுள்ளது. மழை நீர் தேங்கியுள்ள பகுதிகளில் மழை நீரை வெளியேற்ற 536 நீர் இறைப்பான்கள் தயாராக உள்ள நிலையில், 278 இடங்களில் மழை நீரை வெளியேற்ற 340 பம்புகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
191 நிவாரண மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இவற்றில் 6 நிவாரண மையங்களில் 283 நபர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு தேவையான உணவு, பாதுகாப்பான குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. மழை நீர் தேங்கியுள்ளதால் பாதிப்புகுள்ளான 15 பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு 55,500 உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளது. அடுத்த 4 நாட்களுக்கு மழை பொழிவு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
> கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்தூக்குடி, தென்காசி, விருதுநகர், இராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர் மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
> தேசிய பேரிடர் மீட்புப் படை 1149 பேரும், தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படை 899 பேரும் தயார் நிலையில் உள்ளனர்.
> 121 பல்நோக்கு பாதுகாப்பு மையங்களும், 5093 நிவாரண முகாம்களும் தயார் நிலையில் உள்ளன.
> இதுவரை 1070 கட்டணமில்லாத தொலைபேசி மூலமாக 239 தொலைபேசி அழைப்புகள் வந்துள்ளது, அதில் 86 தொலைபேசி அழைப்புகள் சரிசெய்யப்பட்டுள்ளது. 153 தொலைபேசி அழைப்புகளை சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
> சென்னையில் மட்டும் மழை நீர் தேங்கியுள்ளது தொடர்பாக வரப்பெற்ற மொத்தம் 132 தொலைபேசி அழைப்புகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதில், 25 அலுவலர்களுக்கு உரிய தீர்வு காணப்பட்டுள்ளது.
> இன்று (நவ.3) காலை 8 மணி நிலவரப்படி செம்பரம்பாக்கத்தில் மொத்த கொள்ளளவு 24 அடி, தற்போது 20.95 அடி இருக்கிறது. தற்போது செம்பரம்பாக்கத்திற்கு 811 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. 174 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது.
> அதேபோல, செங்குன்றம் (புழல்) ஏரியின் மொத்த கொள்ளளவு 21.20 அடி, தற்போது 18.58 அடியாக இருக்கிறது. தற்போது செங்குன்றம் ஏரிக்கு 391 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. 259 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது.
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சரின் ஆய்வின் போது கூடுதல் தலைமைச் செயலர் / வருவாய் நிருவாக ஆணையர் எஸ். கே. பிரபாகர், பேரிடர் மேலாண்மை இயக்குநர் சி. அ. ராமன், ஆகிய அலுவலர்கள் உடனிருந்தனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.