தமிழக கவர்னர் ஆர்.என்.ரவிக்கும், திமுக கூட்டணி கட்சிகளுக்கும் பல்வேறு விஷயங்களில் கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. கவர்னர் ரவியின் பேச்சுகளுக்கு திமுக கூட்டணி கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. கோவை கார் வெடிப்பு குறித்த கவர்னர் பேச்சுக்கு எதிர்ப்பு கிளம்பியது.
ஏற்கனவே தமிழக அரசு அனுப்பிய சட்ட மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் தரவில்லை என்ற குற்றச்சாட்டு நிலவுகிறது. இதையடுத்து, கவர்னரை திரும்பப் பெற வேண்டும் என்று திமுக கூட்டணி கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
இந்த நிலையில், கவர்னர் ஆர்.என்.ரவியை திரும்பப் பெறுமாறு ஜனாதிபதியிடம் மனு கொடுக்க திமுக முடிவு செய்து மனு ஒன்றை தயார் செய்து வருகிறது. அந்த மனுவில் கையெழுத்திட அறிவாலயத்துக்கு வருமாறு திமுக பொருளாளரும், பாராளுமன்ற குழு தலைவருமான டி.ஆர்.பாலு அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த நிலையில், இரண்டு நாள் பயணமாக இன்று காலை 10.30 மணிக்கு கவர்னர் ஆர்.என்.ரவி டெல்லி செல்கிறார். அங்கு, மத்திய அமைச்சர்களை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பயணம், தமிழக அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.