கிராம சபைக் கூட்டங்கள் வாயிலாக பல்வேறு மக்கள் பிரச்னைகள் உடனடியாக தீர்க்கப்பட்டு வருகின்றன. கிராம சபை போல நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளை வலுப்படுத்தவும், மக்களின் குறைகளைக் கேட்டறியவும் நகர சபையை அமைக்க வேண்டும் என அரசியல் கட்சிகளும், பொதுநல அமைப்புகளும் அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தன. மேலும், இது தொடர்பாக கடந்த 21.2.2022 அன்று, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தலைமைச் செயலாளர் இறையன்பு அவர்களை நேரில் சந்தித்து மனு அளித்தார். அதைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் முதன்முறையாக மாநகர சபைக் கூட்டம் நவம்பர் 1-ம் தேதி உள்ளாட்சி தினத்தில் நடந்து முடிந்தது.
இந்த நிலையில், கட்சிக் கூட்டங்கள் போல் நகராட்சி சபை நடந்ததாக மக்கள் நீதி மய்யம் கண்டனம் தெரிவித்திருக்கிறது. இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில்,“நகரசபைக் கூட்டங்கள் அரசு நிர்வாகத்தில் மக்களின் பங்களிப்பை அதிகப்படுத்தி, ஜனநாயகத்தை வலுப்படுத்தும் என்பதே மக்கள் நீதி மய்யத்தின் நம்பிக்கையும், எதிர்பார்ப்பும்.
ஆனால் நடந்தது என்ன? தலைநகரான சென்னையில் கூட்டங்கள் நடத்தப்படவில்லை. கூட்டங்கள் நடத்தப்பட்ட பிற மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் தி.மு.க-வின் கட்சிக்கூட்டங்கள் போலவே நடத்தப்பட்டது. தாம்பரம் மாநகராட்சியில் அமைச்சர் நேரு, எம்.பி. டி.ஆர்.பாலு முன்னிலையில் பள்ளி மாணவரால் தி.மு.க தலைவரின் கவிதை வாசிக்கப்பட்டு அனைவரும் அதை ரசித்துக் கேட்டு மகிழ்ந்தனர்! இது நகரசபையா, இல்லை தி.மு.க-வின் நாடகசபையா?
வார்டு கவுன்சிலர் தலைமையேற்று நடத்தவேண்டும் என்ற விதிமுறை அப்பட்டமாக காற்றில் பறக்கவிடப்பட்டது. அமைச்சர்கள், எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் தலைமையில் “குறைதீர் கூட்டங்கள்” போலவே இந்தக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. நிதிநிலை அறிக்கை பெரும்பாலான இடங்களில் வாசிக்கப்படவில்லை. தீர்மானங்கள் முறையாக இயற்றப்படவில்லை என்பது போன்ற பல்வேறு குறைபாடுகள் இருந்தாலும், 12 ஆண்டுகளுக்குப் பிறகு நகரங்களில் இதுபோன்ற மக்கள் பங்கேற்கும் கூட்டங்கள் நடைபெறத் தொடங்கி இருப்பது பாராட்டுக்கும், வரவேற்புக்கும் உரியதே.
அடுத்தடுத்த கூட்டங்களில் விதிமுறைகளின்படி இந்தக்கூட்டங்கள் நடத்தப்படவேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் வலியுறுத்துகிறது. மக்களை அதிகாரப்படுத்தும் கிராம சபை, நகர சபை போன்ற எல்லா வழிமுறைகளுக்கும் ஆதரவாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனின் குரல் தொடர்ந்து ஒலித்துக்கொண்டே இருக்கும்” எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.