"நடிகர்களை ரசிங்க; ஆனா, தியாகிகளை நேசிங்க!"- ஈரோட்டில் தமிழ் சினிமா இயக்குநர்கள் உருக்கம்

நாடு முழுவதும் சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்ற பல்வேறு முக்கிய தலைவர்களின் ஊர்களுக்குச் சென்று அவர்கள் வாழ்ந்த மண்ணைச் சேகரிக்கவும், அவர்களின் நினைவுகளைப் பதிவு செய்யவும் தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம், சக்ரா விஷன் இந்தியா பவுண்டேஷன் சார்பில் தாய்மண் யாத்திரை நடத்தத் திட்டமிட்டு, அதன் தொடக்கவிழா நேற்று ஈரோடு சென்னிமலையில் நடைபெற்றது.

முதலில் சென்னிமலையில் வாழ்ந்த திருப்பூர் குமரனின் இல்லத்தில் இருந்து மண்ணைச் சேகரித்தபின், கொடுமுடியில் வாழ்ந்த நடிகையும் சுதந்திரப் போராட்டத் தியாகியுமான கே.பி.சுந்தரம்பாள் நினைவாகவும், கொடுமுடி விளக்கேத்தியில் சுதந்திரப் போராட்ட வீரர் மாரப்ப கவுண்டரின் நினைவாகவும், ஓடாநிலையில் ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட்ட தீரன் சின்னமலை மற்றும் அவரின் போர்த் தளபதியாக விளங்கிய பொல்லான் ஆகியோரின் நினைவாகவும், ஈரோடு கருங்கல்பாளையத்தில் கீழ்பவானி வாய்க்கால் அமைக்கக் காரணமாக இருந்தவரும் சுதந்திரப் போராட்ட வீரருமான முன்னாள் எம்.எல்.ஏ எம்.ஏ.ஈஸ்வரன் நினைவாகவும் மண் சேகரிக்கப்பட்டது.

குத்துவிளக்கேற்றும் இயக்குநர் சத்யம் ராஜசேகர்

இந்த யாத்திரையில் தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தலைவர் ஆர்.கே.செல்வமணி, பொதுச்செயலாளர் ஆர்.வி.உதயகுமார், சத்யம் ராஜசேகர், பேரரசு, லிங்குசாமி, சித்ரா லட்சுமணன், சீனு ராமசாமி, ரவிமரியா, ருத்ரன் ஜவஹர், அருண் காமராஜ் ஆகிய 10 இயக்குநர்கள் பங்கேற்றனர்.
இதைத்தொடர்ந்து நேற்று இரவு ஈரோடு வேளாளர் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திரைப்பட இயக்குநர்கள் பத்துப் பேரும் பங்கேற்றுப் பேசினர்.

ஈரோடு மாவட்டம், பூந்துறையைச் சேர்ந்த ‘சத்யம்’ திரைப்பட இயக்குநர் ராஜசேகர், ”சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட வீரர்களின் பெயர்களை அடுத்த தலைமுறையினரும் அறிந்துகொள்ளும் வகையில் நாடு முழுவதும் பயணித்து 1040 சுதந்திரப் போராட்ட வீரர்கள் வாழ்ந்த மண்ணைச் சேகரித்து, அவர்களின் பெயர்களை கிரானைட்டில் பதிக்கச் செய்து ஒரே இடத்தில் வைத்து அவர்களின் நினைவாக தியாகப் பெருஞ்சுவர் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி இந்தத் தாய்மண் யாத்திரையை ஈரோடு மாவட்டத்தில் தொடங்கியுள்ளோம். இதேபோல அனைத்து மாநிலங்களிலிருந்தும் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட தியாகிகள் வாழ்ந்த மண்ணைச் சேகரித்து தியாகச்சுவர் அமைக்கப்படவுள்ளது. பாண்டிச்சேரியில் அமைக்கப்படவுள்ள தியாகச் சுவரை டிசம்பர் மாதம் பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார்” என்றார்.  

இயக்குநர் ஆர்.கே.செல்வமணி, ”நம்மிடம் இருப்பதிலேயே அதிக மதிப்பு வாய்ந்தது நாம் அனுபவித்துவரும் இந்தச் சுதந்திரம்தான். இன்னும் 100 ஆண்டுகளானாலும் காந்தியடிகள் போன்று சுதந்திரத்துக்காகப் போராடியவர்களின் பெயர் சரித்திரத்தில் நிலைத்து நிற்கும். சரித்திரத்தில் இடம் பெற வேண்டுமானால் சமூகத்துக்காகப் போராட வேண்டும் என்ற செய்தியை நமக்கு அவர்கள் விட்டுச் சென்றுள்ளார்கள்.

தியாகி திருப்பூர் குமரன் சென்னிமலையில் வசித்த வீடு பத்துக்குப் பத்துதான். ஆனால் அவர் வாழ்ந்த வீட்டைத் தேடி எல்லோரும் வரக் காரணம் இந்த நாட்டுக்காக அவர் அளித்த உழைப்பு. சமூக முன்னேற்றத்துக்காகப் பாடுபட்டால் நம் பெயர் வரலாற்றில் நிலைக்கும் என்பதற்கு உதாரணமாக வாழ்ந்தவர்கள் இவர்கள்.

ஆர்.கே.செல்வமணி

தீரன் சின்னமலையின் படைத் தளபதியாக இருந்தவர் பொல்லான். ஆங்கிலேயரின் பல சித்ரவதைகளைத் தாங்கி மன உறுதியுடன் போராடிய பொல்லானைப் பற்றி நம்மில் பல பேருக்குத் தெரியவில்லை. அவரை யார் என்று தெரியாமல் இருந்ததற்காக நான் வெட்கப்படுகிறேன். இதுபோல பல அறியாத சுதந்திரப் போராட்ட வீரர்களின் பெயரை நாடு முழுவதும் அறிந்துகொள்ளச் செய்ய வேண்டும் என்பதற்காக எடுக்கப்பட்டுள்ள இந்த முயற்சியை நான் மனதாரப் பாராட்டுகிறேன்.

இந்தியா முழுவதும் திரைப்பட இயக்குநர்கள் பயணம் செய்து தியாகிகள் வாழ்ந்த மண்ணைக் கலசத்தில் சேகரிக்க இருக்கிறோம். அதற்கான முதல்படியை ஈரோட்டில் எடுத்து வைத்துள்ளோம்” என்றார்.

இயக்குநர் ஆர்.வி.உதயகுமார், ”நாடு முழுவதும் சுதந்திரத்துக்காகப் போராடியவர்களின் பெயர்கள் தாங்கிய தியாகச் சுவரை 75 இடங்களில் அமைக்கத் திட்டமிட்டிருப்பது சிறந்த முயற்சி. நீங்கள் நடிகர்களின் பெயரைச் சொல்லும்போது கைத்தட்டுவது முக்கியமல்ல, தியாகிகளையும், உங்கள் கல்விக்கூடங்களையும் போற்றி வணங்குங்கள். நாங்கள் கிரியேட்டர்ஸ். எங்க கிரியேஷன் நல்லா இருந்தா எங்களை சந்தோஷப்படுத்துங்க… ஆனா எங்களை வணங்காதீங்க” என்றார்.

ஆர்.வி.உதயகுமார்

இயக்குநர் பேரரசு, ”நான் பல படங்களை டைரக்ட் செய்திருக்கேன். அதில் கிடைக்காத சந்தோஷம், திருப்பூர், கொடுமுடி, ஓடாநிலை, கருங்கல்பாளையம் ஆகிய இடங்களுக்குப் போனபோது கிடைத்தது. மாபெரும் தியாகிகள் வாழ்ந்த ஊரில் இருந்து மண்ணைச் சேகரித்தபோது மிகத் திருப்தியடைந்தேன். முன்பு வறண்ட பூமியாக இருந்த ஈரோடு வளமாக மாறக் காரணமான கீழ்பவானி வாய்க்காலை வெட்டக் காரணமாக இருந்த தியாகி ஈஸ்வரன் வாழ்ந்த மண்ணில் இருந்து மண்ணைச் சேகரித்தது என் வாழ்வில் செய்த திருப்தியான காரியமாக உணர்ந்தேன். நடிகர்களை ரசிங்க..னானால், தியாகிகளை நேசிங்க.. அவர்களை நேசித்தால்தான் நாடு உருப்படும்” என்றார்.

இயக்குநர் சீனுராமசாமி, ”தியாகிகள் வாழ்ந்த இடங்களில் இருந்து மண்ணைச் சேகரிக்கும் இந்தப் பணியை நான் என் அடிமனதிலிருந்து பாராட்டுகிறேன். இயக்குநர் சத்யம் ராஜசேகர் மேற்கொண்டிருக்கும் இந்த மகத்தான பணியை ஒரு இயக்குநராகப் பாராட்டுகிறேன். பிரபலமாக இருக்குற எல்லோரும் புகழோடு இருப்பதாக அர்த்தம் இல்லை. உண்மையான புகழ் என்பதே இந்தச் சமூகம் நம்மை நன்றியோடு நினைத்துப் பார்ப்பதுதான். இந்தக் காலத்துக் குழந்தைகள் யார் சொன்னாலும் நம்ப மாட்டீங்க. கூகுளைத்தான் நம்புவீங்க. அந்த வகையில் 1040 தியாகிகளின் தியாகத்தையும், வரலாறு, புகழையும் கூகுளில் சேர்க்கும் அரிய பணியை மேற்கொண்டுள்ள இயக்குநர் ராஜசேகருக்கு எனது பாராட்டுகளைத் தெரிவித்துகொள்கிறேன்” என்றார்.

இயக்குநர் லிங்குசாமி, ”எனக்கு குடும்ப உணர்வு அதிகம். நண்பர்கள் மீதும், சினிமா மீதும் கிரேஸ் அதிகம். ஆனால் நமக்கு தேசப்பற்று இருக்கா, அதற்காக நாம் என்ன செய்துள்ளோம் என்று நினைத்திருக்கேன். இந்த நிகழ்வில் கலந்துகொண்டதன் மூலம் எனக்கும் தேசப்பற்று இருப்பதாக நினைத்துப் பெருமிதம் கொள்கிறேன். இங்கு தியாகிகள் வாழ்ந்த ஊரின் மண்ணைச் சேகரிக்கும்போது உணர்வுபூர்வமாக இருந்தது” என்றார்.

இயக்குநரும் நடிகருமான ரவிமரியா, ”நான் ஜாலியா பேசுவேன்னு நினைக்கிறீங்க. சாரி… இன்னிக்கு அப்படிப் பேசப்போறதில்லை. 1040 தியாகிகளின் புண்ணிய மண்ணைச் சேகரித்து தியாகச் சுவர் எழுப்பப்போறாங்க. அந்தத் தியாகிகள் துன்பப்பட்டு, துயரப்பட்டு வாங்கித் தந்த சுதந்திரத்தை நாம் அனுபவிப்பதை அந்த ஆன்மாக்கள் மேலேயிருந்து பார்த்திருப்பாங்க.
ஆரம்பத்துல நாம் சுதந்திர தினத்தைப் பெரிதாகக் கொண்டாடினோம். நாள் ஆக ஆக சுதந்திர தினத்தைக் கொண்டாடுவதைக்கூட மறந்துவிட்டோம்.

சுதந்திர வேள்வியில் தமிழகம் நூலாசிரியர் ஸ்டாலின் குணசேகரனைப் பாராட்டும் இயக்குநர்கள்.

அந்த ஆன்மாக்கள் எல்லாம் பிரதமர் மோடியின் கனவில் போய்ச் சொன்னதாலதான், இந்த வருஷம் ஒவ்வொரு வீட்டிலும் சுதந்திர தினத்தைக் கொடியேற்றி வைத்துக் கொண்டாடுங்கள் என்று மோடி கேட்டுக்கொண்டார். அதைத்தான் எங்க சங்கத்திலயும் நாங்க செய்தோம். இந்திய சுதந்திரத்துக்காகப் போராடிய அனைத்து ஆன்மாக்களும் இங்கதான் இருக்கு. அவர்களைப் போற்றும் வகையில் சுதந்திர தினவிழாவைச் சிறப்பாக நாம் கொண்டாட வேண்டும்.

ஓடாநிலையில் தீரன் சின்னமலையின் தளபதியான பொல்லானின் கதையைக் கேட்ட போது எனக்குக் கண்ணீர் வந்தது. தலைகீழாகத் தொங்க விட்டு, அவரது தோலை உரித்து ஆங்கிலேயர்கள் சித்ரவதை செய்துள்ளனர். அவர் செய்த மாபெரும் தியாகத்தைப் போற்றும் வகையில் அங்கு அவரது நினைவாக ஒரு கல்கூட வைக்கவில்லை. அவருக்கு மணி மண்டபம் அமைக்க வேண்டும். அவரது தியாகத்தை இன்றுதான் நான் தெரிந்துகொண்டேன். நம் தந்தையை உயர்வாக நினைப்பதைப் போல தியாகிகளின் நினைவையும் உயர்வாகப் போற்ற வேண்டும்” என்றார்.

இயக்குநர் சித்ரா லட்சுமணன், ”நம் நாட்டுக்காகப் போராடியவர்களுக்கு வரவேற்பு அளிக்க வேண்டும். திரைப்படக் கதாநாயகர்களைவிட 100 மடங்கு பெரியவர்கள் நம் சுதந்திரப் போராட்டத் தியாகிகள்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.