நிலக்கரி சுரங்க முறைகேடு: ‘முடிந்தால் கைது செய்யுங்கள்’ – ஜார்க்கண்ட் முதல்வர் சவால்

நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடு விவகாரத்தில் விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அளித்திருந்த நிலையில், ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் இன்று அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகாமல், பாஜகவை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
நிலக்கரி சுரங்கங்களுக்கான உரிமங்களை முறைகேடாக வழங்கியதாகவும், கருப்பு பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில், ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகும் படி ஹேமந்த் சோரனுக்கு கடிதம் அனுப்பப்பட்டிருந்தது.
ஆனால் அவர் நேரில் ஆஜராகாமல், ‘முடிந்தால் என்னை அமலாக்கத்துறை கைது செய்யட்டும்’ என சவால் விட்டதுடன், தனக்கு அளிக்கப்பட்ட சம்மனை மத்திய அரசின் பழிவாங்கும் நடவடிக்கை என குற்றம் சாட்டினார். ராஞ்சி நகரில் தனது ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி தொண்டர்களிடையே பேசிய சோரன், தான் சத்தீஸ்கர் மாநிலம் சென்று அங்கே பழங்குடியினர் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ளப் போவதாக தெரிவித்தார். பின்னர் அவர் சத்தீஸ்கர் மாநிலத்தின் தலைநகரான ராய்ப்பூருக்கு புறப்பட்டார்.
image
“என் மீது குற்றம் இருந்தால் என்னை கைதுசெய்ய வேண்டியதுதானே? விசாரணைக்கு அவசியம் என்ன?” என ஹேமந்த் சோரன் கேள்வி எழுப்பினார். எனக்கு அமலாக்கத்துறை, சிபிஐ போன்ற அமைப்புகளை கண்டு அச்சம் இல்லை எனவும், இந்த அமைப்புகள் தங்களுடைய அதிகாரங்களை எதிர்க்கட்சிகளுக்கு தொல்லை கொடுக்க தவறாக பயன்படுத்துவதாகவும் குறிப்பிட்டார். பாரதிய ஜனதா கட்சியின் தூண்டுதலால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை தவிர்க்க இந்த அமைப்புகள் முயற்சி செய்கின்றன என ஜார்க்கண்ட் முதல்வர் குற்றம் சாட்டினார்.
கணக்கில் வராத பணத்தை வைத்திருந்தது மற்றும் ஆயுதங்களை வைத்திருந்தது போன்ற குற்றச்சாட்டுகள் ஜார்க்கண்ட் முதல்வருக்கு நெருக்கமான ஊழியர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த ஊழல் குற்றச்சாட்டுகள் மீதான விசாரணையை அமலாக்கத்துறை நடத்திவரும் நிலையில், ஹேமந்த் சோரன் இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என குற்றம் சாட்டியுள்ளார்.
image
தனக்குத்தானே நிலக்கரி சுரங்க உரிமத்தை வழங்கி கொண்டதாகவும், ஜார்க்கண்ட் முதல்வர் மீது விசாரணை நடைபெற்று வருகிறது. தேர்தல் ஆணையம் அவரது சட்டமன்ற உறுப்பினர் பதவியை பறிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் தனது பரிந்துரையை ஜார்க்கண்ட் ஆளுநர் ரமேஷ் பயசுக்கு அனுப்பி உள்ளதாக தகவல் வெளியான நிலையில், ஆளுநர் என்ன முடிவு எடுப்பார் என்பது ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
– கணபதி சுப்ரமணியம்Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.