படியில் தொங்கி மரணிக்கும் மாணவர்கள் – போதுமான பேருந்து வசதி இல்லாதது மட்டுமே காரணமா?!

தமிழக அரசு அனைத்து அரசு போக்குவரத்துக் கழகங்களிலும் பயணம் செய்யும் மாணவர்களுக்கு கட்டணமில்லா பயணச் சலுகைகளை வழங்குகிறது. இதன்படி அரசு, அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் உள்ளிட்ட அனைத்துப் பள்ளிகள் (1-12ம் வகுப்பு வரை), தேசிய குழந்தை மற்றும் தொழிலாளர் திட்ட நலப்பள்ளி, அரசு பல்தொழில்நுட்பப் பயிலகங்கள், அரசு தொழிற்பயிற்சிக் கூடங்கள், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், சமுதாயக் கல்லூரிகள், அரசு உதவிபெறும் தனியார் தொழிற்பயிற்சிக் கூடங்கள், இசைக் கல்லூரிகள், சென்னை மாநகராட்சி தொழிற்பயிற்சிக் கூடங்கள் ஆகியவற்றில் பயிலும் மாணவர்கள் இலவசமாகப் பயணிக்க முடியும்.

இதுபோல் அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்லூரிகள், தனியார் தொழில்நுட்ப பயிலகங்கள், தனியார் பொறியியல் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் 50 சதவீத கட்டணச் சலுகையைப் பயன்படுத்திப் பயணிக்க முடியும். இதற்காக ஒவ்வொரு ஆண்டும் சம்மந்தப்பட்ட மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸானது அவர்கள் பயிலும் கல்வி நிலையங்கல் மூலம் வழங்கப்படும். இதனை பயன்படுத்தி மாணவர்கள் பயணித்து வருகிறார்கள். காலை, மாலை நேரங்களில் அவர்கள் பயணிக்கும் போது கூட்ட நெரிசல் மிகுந்து காணப்படும். குறிப்பிட்ட நேரத்தில் அவர்கள் பள்ளிக்கு செல்ல வேண்டும் என்பதால் படியில் தொங்கிக்கொண்டு பயணிக்கின்றனர். 

இது மற்ற மாவட்டங்களை ஒப்பிடுகையில் சென்னையில் அதிகமாக இருக்கிறது. இவ்வாறான பயணம் சில நேரங்களில் அவர்களின் உயிருக்கு கூட ஆபத்தை விளைவித்து விடுகிறது. இதற்கு சமீபத்திய நிகழ்வுகள் சாட்சியாக அமைத்துள்ளன. அதாவது சென்னையில் 2 வாரங்களில் படியில் தொங்கி பயணித்த 3 மாணவர்கள் மரணித்துள்ளனர். அதாவது கடந்த 28ம் தேதி மாம்பாக்கம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்த யுவராஜ் என்ற மாணவர் எம்.டி.சி பேருந்தில் ஏறியுள்ளார். பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்ததாகவும் அதனால் அவர் முன்பக்க படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்ததாகக் கூறப்படுகிறது. 

அப்போது திடீரென படிக்கட்டிலிருந்து மாணவன் யுவராஜ் தவறி கீழே விழுந்த நிலையில், பேருந்தின் பின் பக்க டயர், மாணவன் மீது ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார். இதைபோல் தனியார் கல்லூரி மாணவர் சஞ்சய், கடந்த 26-ம் தேதி தாம்பரத்திலிருந்து திருப்போரூர் சென்ற அரசு பஸ்சில் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்துள்ளார். வண்டலூர் – கொளப்பாக்கம் சாலையில் நிலை தடுமாறி அவர் கீழே விழுந்து பலியானார்.

பள்ளிக் கல்வித்துறை

மேலும் சென்னையை அடுத்த பெரும்பாக்கம் பகுதியைச் சேர்த்த ஆர்யா, மேடவாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த மாதம் 8-ந் தேதி  தாம்பரத்திலிருந்து  அடையாறு செல்லும் மாநகர பஸ்சில் அவர் பயணம் செய்தார். பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்ததால் அவர் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்ததாகக் கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராதவிதமாக மாணவன் ஆர்யா, நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் பல நாள்கள் சிகிச்சையிலிருந்த அவர் உயிரிழந்தார். 

இவ்வாறு தொடர்ந்து உயிரிழப்புகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இதற்கு ஒருபுறம் பேருந்துகளின் எண்ணிக்கை ஒரு சில வழித்தடங்களில் குறைவாக இருப்பது காரணம்  என பெற்றோர்கள் தரப்பில் குற்றஞ்சாட்டப்படுகிறது. ஆனால் மற்றொருபுறம் மாணவர்கள் பலர் ஆபத்தை உணராமல் சாகசத்தில் ஈடுபடுவதே இதற்கு காரணம் என்ற குற்றச்சாட்டை சமூக ஆர்வலர்கள் முன்வைக்கின்றனர். இதற்கு ஆபத்தான முறையில் மாணவர்கள், பேருந்துகளில் பயணிக்கும்  வீடியோ அவ்வப்போது சமூக வலைத்தளங்களில்  வைரலாகி  வருவருவதை அவர்கள் காரணமாகக் கூறுகின்றனர். 

தமிழக அரசு – தலைமைச் செயலகம்

இதுகுறித்து நம்மிடம் பேசிய சென்னையை சேர்த்த சமூக ஆர்வலர் அன்பழகன், “பெரும்பாலான மாணவர்கள் கதவு இருக்கும் பேருந்துகளில் பயணிப்பதைத் தவிர்க்கின்றனர். பிறகு கதவு இல்லாத பேருந்து வந்ததும் அதில் படியில் தொங்கியவாறு பயணம் செய்கிறார்கள். சில நேரங்களில் இது உயிரிழப்பை ஏற்படுத்துகிறது. இதை ஆங்காங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் போக்குவரத்து  போலீசார்  கண்டுகொள்வதில்லை. இதுவே ஒரு பைக்கில் மூன்று பேர் சென்றால் அவர்களை பிடித்து அபராதம் விதிக்கிறார்கள். 

ஆனால் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது இல்லை. இதுவும் ஒரு முக்கிய காரணம் ஆகும். எனவே படியில் தொங்கியவாறு பயணிக்கும் மாணவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பள்ளி, கல்லூரி நேரத்தை மாற்றி அமைக்கலாம். அதாவது காலை 7 மணிக்கு பள்ளி தொடங்கும் வகையில் மாற்றி அமைக்க வேண்டும். அப்போது பள்ளி முடிவடையும் நேரமும் முன்னதாக இருக்கும். இதன் மூலமும் மாணவர்கள் தொங்கி செல்வதை தடுக்க முடியும்” என்றார்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய போக்குவரத்துத்துறை அதிகாரி ஒருவர், “பேருந்துகள் போதுமான அளவில் இயக்கப்பட்டு வருகிறது. மாணவர்கள் தான் வேண்டும் என்றே படியில் தொங்குகிறார்கள். ஒருசில இடங்களில் பற்றாக்குறை இருக்கலாம். இதுகுறித்து அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.